‘நடத்தையில் சந்தேகப்பட்டதால் கணவனை கம்பியால் அடித்துக் கொன்றேன்’ கைதான 2-வது மனைவி பரபரப்பு வாக்குமூலம்


‘நடத்தையில் சந்தேகப்பட்டதால் கணவனை கம்பியால் அடித்துக் கொன்றேன்’ கைதான 2-வது மனைவி பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 18 Oct 2020 11:31 AM IST (Updated: 18 Oct 2020 11:31 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரத்தில் கணவனை கொலை செய்ததாக அவரது 2-வது மனைவியை போலீசார் கைது செய்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டதால் கணவனை கொலை செய்ததாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் வி.நகர் 3-வது தெரு பாப்பாத்தி காடு பகுதியை சேர்ந்த நெசவு தொழிலாளி சரவணன் (வயது 48). இவருக்கு மல்லிகா (43) மற்றும் சரசு (40) என்ற 2 மனைவிகள் உள்ளனர். இவர்கள் இருவரும் அக்காள் தங்கை ஆவர். அக்காள், தங்கை இருவருக்கும் 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். சரவணன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து 2-வது மனைவி சரசிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த சரவணன் சரசிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அன்று இரவு சரவணன் அவரது வீட்டின் மாடியில் தூங்குவதற்காக சென்றுவிட்டார். சரசு மாடிக்கு சென்றபோது அப்போதும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சரசு இரும்புக் கம்பியால் கணவரை தாக்கியதாக தெரிகிறது. இதில் தலையின் பின்புறத்தில் பலத்த காயம் அடைந்த சரவணன் இறந்தார். பிறகு அவரை துணி காயப்போடும் கம்பியில் சேலையால் கழுத்தை இறுக்கி கட்டி உள்ளார். இந்த நிலையில் சரவணன் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடி உள்ளார்.

இதுகுறித்து ராசிபுரம் கிராம நிர்வாக அதிகாரி சரவணன் ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இளங்கோ, சப்-இன்ஸ்பெக்டர் ரம்யா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவரது 2-வது மனைவி சுரசு மீது போலீசாருக்கு சந்தேகம் வரவே அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் சரசு அவரது கணவன் சரவணனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர் விசாரணையில் சரவணன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து தனது நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும், சம்பவத்தன்றும் குடித்துவிட்டு வந்து நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்ததால் அவரை கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதையொட்டி போலீசார் சரசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story