மதுரை மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை ரூ.1,600 மற்ற பூக்கள் விலையும் உயர்வு
மதுரை மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 1,600-க்கு விற்பனையானது.
மதுரை,
மதுரை மல்லிகைப்பூவுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. வரத்து குறைவாக இருந்ததாலும் கொரோனா அச்சத்தாலும், கடந்த சில வாரங்களாக மல்லிகைப்பூவின் விலை குறைவாக இருந்தது. ஆனால், தற்போது அதனுடைய விலை அதிகரிக்க தொடங்கி உள்ளது. காரணம் என்னவென்றால், பண்டிகை காலம் நெருங்குகிறது. அதுபோல், மழைக்காலம் தொடங்கி இருப்பதால் பூக்களின் உற்பத்தியும் குறைய தொடங்கி இருக்கிறது.
நேற்று மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை ரூ. 1,600 முதல் ரூ.1,800 வரை இருந்தது. இதுபோல் ஒரு கிலோ பிச்சிப்பூவின் விலை ரூ. 450 முதல் ரூ. 600 வரை இருந்தது. கனகாம்பரத்தின் விலையும் ரூ. 1000 வரை இருந்தது. பட்டன் ரோஸ், ரோஜாப்பூவின் விலையும் ஏறுமுகம் தான்.
பூக்கள் அனைத்தும் அதிக விலையில் விற்றாலும், மல்லிகை பூவின் தேவை அதிகமாக இருப்பதால் அதனை வாங்க வந்த மக்களின் கூட்டமும் அதிகமாக இருந்தது. இதனால் பூ மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான கடைகளில் கூட்டம் அலைமோதியது.
இதுகுறித்து பூ வியாபாரி கணேஷ்பிரபு கூறுகையில், இன்று( ஞாயிற்றுக்கிழமை) ஐப்பசி மாதத்தின் முதல் முகூர்த்த தினம் என்பதால் ஏராளமான சுப நிகழ்ச்சிகள் உள்ளன. அதுமட்டுமின்றி கோவில் திருவிழாக்கள், நவாரத்திரி விழா உள்ளிட்டவையும் இருக்கின்றன. இதனால் மல்லிகைப்பூ விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் அச்சுறுத்ததால் மல்லிகைப்பூக்களின் வரத்து குறைந்துள்ளது. வரும் காலங்களில் மல்லிகைப்பூ வரத்து அதிகரித்த பின்னர் தான் விலை குறைய வாய்ப்பிருக்கிறது.
குறிப்பாக அடுத்த 15 தினங்களுக்கு வளர்பிறை இருப்பதால் பூக்களின் விலை அதிகமாக இருக்கும். மார்கழி, தை மாதத்திற்கு பின்னர் தான் பூக்களின் விலை குறையும். பொதுவாக அந்த மாதங்களுக்கு பின்னர் தான் மல்லிகைப்பூவின் உற்பத்தியானது அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story