கல்லல் வாரச்சந்தையில், முக கவசம் அணியாமல் கூடும் கூட்டத்தால் கொரோனா பரவும் அபாயம்


கல்லல் வாரச்சந்தையில், முக கவசம் அணியாமல் கூடும் கூட்டத்தால் கொரோனா பரவும் அபாயம்
x
தினத்தந்தி 18 Oct 2020 9:15 AM GMT (Updated: 18 Oct 2020 9:00 AM GMT)

கல்லலில் நடைபெற்ற வாரச்சந்தையில் முக கவசம் அணியாமல் பொதுமக்கள், வியாபாரிகள் கூடுவதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கல்லல்,

காரைக்குடி அருகே உள்ளது கல்லல். கல்லலை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் அத்தியாவாசிய பொருட்கள் வாங்குவதற்காகவும், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தினந்தோறும் கல்லல் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கல்லல் கோவில் தெப்பக்குளம் அருகில் வாரச்சந்தை கட்டிடம் அமைக்கப்பட்டு இயங்கி வந்தது. இந்தநிலையில் கொரோனா தொற்று காரணமாக அந்த பகுதியில் இயங்கி வந்த அந்த வாரச்சந்தை மூடப்பட்டு கோவில் தெப்பக்குளத்தை சுற்றி வியாபாரிகள் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று வாரச்சந்தை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.

இவ்வாறு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் சந்தை முடிந்த பின்னர் அந்த தெப்பக்குளத்தை சுற்றியும், உள்ளேயும் கழிவுகளை கொட்டி விட்டு செல்வதாக எழுந்த புகாரின் பேரில் இந்த வாரம் முதல் மீண்டும் பழைய இடத்திற்கே வாரசந்தை மாற்றப்பட்டது. இந்தநிலையில் கொரோனா தொற்று ஆரம்ப காலக்கட்டத்தின்போது வாரசந்தையின்போது சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு கடை போட்டு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் கட்டயமாக முககவசம் அணிய வேண்டும் என்றும், கைகளில் கையுறை அணிந்து வியாபாரம் செய்ய வேண்டும், பொதுமக்கள் கடையில் பொருட்கள் வாங்கும் போது கூட்டமாக சேருவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தனர். அதன்படி கடந்த காலக்கட்டத்தின் போது வாரச்சந்தையின் கடைகள் போட்டு வியாபாரம் செய்த வியாபாரிகளும், பொதுமக்களும் முறையாக முக கவசம் அணிந்து வந்தனர்.

தற்போது மீண்டும் அதை கடைப்பிடிக்காமல் காற்றில் பறக்க விட்டபடி நடந்து வருகின்றனர். அவ்வாறு அங்கு கடை போட்டு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் எவ்வித முக கவசமும் அணியாமல் வியாபாரம் செய்து வருகின்றனர். இதேபோல் அங்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் எவ்வித முறைகளையும் கடைப்பிடிக்காமல் பொருட்களை வாங்கி சென்றனர். தற்போது சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் வேளையில் மீண்டும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து கல்லல் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆறுமுகம் கூறியதாவது:- கல்லல் நகரில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் இந்த வாரச்சந்தையின் போது ஏராளமான கிராம மக்கள் பஸ்கள், மோட்டார் சைக்கிளில் வந்து பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். கடந்த 6மாதங்களாக இந்த பகுதியில் கொரோனா தொற்று அதிகமாக இருந்து வந்த நிலையில் அதன்பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிள் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் வெகுவாக குறைந்தது.

தற்போது மீண்டும் அவர்களின் நடவடிக்கை செயல்பாடுகள் குறைந்ததால் வாரச்சந்தையின் போது வரும் பொதுமக்களும், கடை போட்டு வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் முக கவசம் அணியாமல் வியாபாரம் செய்வதால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே வரும் வாரத்தில் இந்த வாரச்சந்தையின் போது முககவசம் அணியாமல் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மீது சுகாதாரத்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து அபாரதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story