ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் எலக்ட்ரானிக்ஸ் கடையில் பணம் திருட்டு - கண்காணிப்பு கேமராவில் பதிவான திருடன்
வீரப்பன்சத்திரம் எலக்ட்ரானிக்ஸ் -பர்னிச்சர் கடையில் பணம் திருடிய திருடன் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளான்.
ஈரோடு,
ஈரோடு வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் வளாகத்தில் தாமிரபரணி எலக்ட்ரானிக்ஸ் அன்டு பர்னிச்சர் கடை உள்ளது. இங்கு தற்போது தீபாவளி சிறப்பு விற்பனை நடந்து வருகிறது. இதற்காக ஏராளமான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னிச்சர் பொருட்கள் குவிக்கப்பட்டு உள்ளன. தினசரி நூற்றுக்கணக்கானவர்கள் வந்து பொருட்களை வாங்கிச்செல்கிறார்கள்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கடையின் உரிமையாளர் பொன் நாராயணன் மற்றும் கடை ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.
பின்னர் நேற்று காலை வழக்கம் போல வந்து கடையை திறந்தனர். அப்போது கடைக்குள் அதிக வெளிச்சம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கு பார்த்தபோது, கடையின் மேற்கூரை பகுதி உடைக்கப்பட்டு கிடந்தது.
உடனடியாக கடையில் வைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்தனர்.
அப்போது நள்ளிரவில் கடையின் மேற்கூரையை உடைத்து திருடன் ஒருவன் கடைக்குள் குதிப்பதும், சாவகாசமாக அனைத்து பகுதிகளிலும் பணம் இருக்கிறதா? என்று தேடுவதும் பதிவாகி இருந்தது.
இதுபோல் கடையின் அனைத்து பகுதிகளுக்குள்ளும் சென்று மின் விளக்கு களை எரிய விட்டு எங்காவது பணம் இருக்கிறதா? என்று தேடியுள்ளான். ஆனால் எதுவும் கிடைக்காததால், அலுவலக அறைக்குள் நுழைந்து அங்கும் ஏதேனும் சிக்குமா என்று பார்த்துவிட்டு சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் அங்குள்ள மேஜையில் இருந்த சில ஆயிரம் பணத்தையும் திருடிவிட்டு அங்கிருந்து கூரை வழியாகவே ஏறி தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன.
இதுபற்றி வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் விரைந்து கடையில் அனைத்து இடங்களையும் பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் உருவத்தை அடையாளமாக வைத்து தேடுதல் வேட்டையில் இறங்கி வருகிறார்கள்.
இதுபற்றி கடை உரிமையாளர் பொன் நாராயணன் கூறும்போது, ‘தாமிரபரணி கடையில் 3-வது முறையாக கூரையை உடைத்து திருடர்கள் நுழைந்து உள்ளனர். ஒவ்வொரு முறையும் கடைக்குள் புகுந்து அதிக சேதத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த முறை ரூ.50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதிப்பில் சேதம் ஏற்பட்டு உள்ளது. பணத்தை திருடும் நோக்கத்தில் வருகிறார்களா? இல்லை வேறு காரணங்களா? என்று விசாரிக்க போலீசாரிடம் புகார் தெரிவித்து உள்ளேன். மேலும் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
Related Tags :
Next Story