தனியார் நிறுவன ஊழியரை தாக்கி மோட்டார் சைக்கிள்- செல்போன் பறிப்பு - 4 பேருக்கு வலைவீச்சு


தனியார் நிறுவன ஊழியரை தாக்கி மோட்டார் சைக்கிள்- செல்போன் பறிப்பு - 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 18 Oct 2020 4:00 PM IST (Updated: 18 Oct 2020 3:58 PM IST)
t-max-icont-min-icon

கபிஸ்தலம் அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கி மோட்டார் சைக்கிள்- செல்போனை பறித்து சென்ற 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை சரவண பொய்கை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது44). இவர் தஞ்சையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் வேலை முடிந்த உடன் தஞ்சையில் இருந்து சுவாமிமலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம். சம்பவத்தன்று காலை மோட்டார் சைக்கிளில் தஞ்சையில் உள்ள தனது நிறுவனத்துக்கு சென்ற மணிகண்டன் பணி முடிந்த உடன் இரவு திருவையாறு -கும்பகோணம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சுவாமிமலை நோக்கி சென்றார்.

கபிஸ்தலத்தை அடுத்து உமையாள்புரம் - அண்டகுடி இடையே அவர் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த 4 பேர் திடீரென மணிகண்டனை வழிமறித்து அவரை தாக்கி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துக்கொண்டு மணிகண்டனை கீழே தள்ளிவிட்டு சென்று விட்டனர். இது குறித்து அவர் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியரை தாக்கி மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்து சென்ற 4 பேரையும் தேடி வருகிறார்கள். தனியார் நிறுவன ஊழியரை தாக்கி மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story