7 மாதங்களுக்கு பிறகு கரூரில் கொண்டாட்டத்திற்கு தயாராகும் தியேட்டர்கள் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்


7 மாதங்களுக்கு பிறகு கரூரில் கொண்டாட்டத்திற்கு தயாராகும் தியேட்டர்கள் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 18 Oct 2020 12:30 PM GMT (Updated: 18 Oct 2020 12:28 PM GMT)

7 மாதங்களுக்கு பிறகு ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு கரூரில் தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கரூர், 

தியேட்டர்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். தங்களுக்கு பிடித்த நடிகர்களின் திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது என்பது ஒரு திருவிழாவிற்கு சமமான ஒன்றாகும். அந்தளவிற்கு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என தியேட்டர்கள் களைகட்டும். காலை முதலே ரசிகர்களின் வெள்ளம் தியேட்டர்களை சூழ்ந்து இருக்கும். அன்றைய தினம் நடிகர்களின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது, தோரணம் கட்டுவது, தியேட்டர் முழுவதும் ப்ளக்ஸ் பேனர்கள் வைப்பது, சரவெடிகள் வெடிப்பது என்று ரசிகர்கள் தியேட்டர்களை அலங்கரித்து விடுவார்கள்.

அதிலும் குறிப்பாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே குடும்பத்துடன் சென்று தியேட்டர்களில் திரைப்படங்களை பார்ப்பது தனி சுகம். அதனால்தான் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் பண்டிகை நாட்களை குறிவைத்தே வெளியாகிறது. பண்டிகை நாட்களில் வீடுகளில் சாமி கும்பிட்டு, குடும்பத்துடன் கொண்டாடுவது ஒருபக்கம் இருந்தாலும், அன்றைய தினமே தியேட்டர்களுக்கு சென்று திரைப்படங்களை கண்டால் தான் பலருக்கு அந்த பண்டிகை முழு திருப்தியை கொடுக்கும். தற்போதைய நவீன உலகிற்கு ஏற்றாற்போல் தியேட்டர்களில் புது, புது டெக்னாலஜிகளை புகுத்தி வருகின்றனர். அதனால் தான் தியேட்டர்களை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

ஆனால் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன்படி பள்ளிகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், கடைகள், சுற்றுலாதலங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதன்பின் அடுத்தடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதையடுத்து கடைகள், ஓட்டல்கள் திறக்கப்பட்டன. போக்குவரத்துக்கும் அனுமதிக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை திரும்பி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த 15-ந்தேதி முதல் தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. பின்னர் அதற்கான வழிகாட்டு முறைகளை வெளியிட்டது. அதில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஒரு இருக்கை இடைவெளிவிட்டு பார்வையாளர்களை அமர செய்ய வேண்டும். டிக்கெட் கவுண்ட்டர்கள் நாள் முழுவதும் திறந்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு முறைகளை அறிவித்தன.

இதனால் பல மாதங்களுக்கு பிறகு தியேட்டர்களில் திரைப்படங்களை காண ரசிகர்கள் தயாராக உள்ளனர். ஆனால் தமிழகத்தில் கடந்த 15-ந் தேதி தியேட்டர்கள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் தியேட்டர்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வெளியாகும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். இதனால் விரைவில் தியேட்டர்கள் திறப்பது உறுதியான நிலையில் கரூரில் உள்ள தியேட்டர்களில் வளாகம் சுத்தப்படுத்தும் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

மேலும் தியேட்டர்கள் திறப்பு தேதி அறிவித்த உடன் தியேட்டர்கள் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தவும், அரசு வழிகாட்டு முறைப்படி சீட்டுகளை முறைப்படுத்தவும், டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைப்பது போன்ற பணிகளை தொடங்க தயாராக உள்ளனர். மேலும் ரசிகர்கள் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் மற்றும் உடல் வெப்பநிலை அறிய தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட அனைத்தும் தயார்நிலையில் உள்ளன. இதனால் ரசிகர்களும் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

Next Story