மிக குறைந்த மதிப்பெண்கள் கிடைத்ததால் சந்தேகம்: ‘நீட்’ தேர்வு முடிவில் குளறுபடி? அரியலூர் மாணவி பரபரப்பு குற்றச்சாட்டு
மிக குறைந்த மதிப்பெண்களே கிடைத்துள்ளதால் ‘நீட்‘ தேர்வு முடிவில் குளறுபடி நடத்திருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அரியலூர் மாணவி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
உடையார்பாளையம்,
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவ- மாணவிகள் சேர்வதற்கு தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (‘நீட்‘) நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ‘நீட்‘ தேர்வு கடந்த மாதம் 13-ந் தேதி நடத்தப்பட்டது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம், தத்தனூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் மகாராணி. இவர் கணினி பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மகள் மஞ்சு (வயது 19). அரியலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 முடித்துள்ள இவருக்கு, டாக்டராக வேண்டும் என்று கனவு உள்ளது.
இதனால் அவர் ‘நீட்‘ தேர்வுக்காக ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். இதைத்தொடர்ந்து ‘நீட்‘ தேர்வை தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் அவர் எழுதினார். பின்னர் தேர்வு முடிவை நோக்கி அவர் காத்திருந்தார்.
இந்நிலையில் ‘நீட்‘ தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் மாணவி மஞ்சு 37 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார். மேலும் தேர்வு முடிவில் குளறுபடி ஏற்பட்டிருக்கலாம், என்ற சந்தேகம் அவருக்கு எழுந்துள்ளது.
இது குறித்து மாணவி மஞ்சு கூறியதாவது;-
நான் ‘நீட்‘ தேர்வு எழுதியபோது 3 கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளிக்கவில்லை. மற்ற அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுதியிருந்தேன். இதனால் எனக்கு 680 மதிப்பெண்கள் வரை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். இந்நிலையில் வெறும் 37 மதிப்பெண்கள் மட்டுமே எனக்கு கிடைத்துள்ளது. இதனால் நீட் தேர்வு ஆணையத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 கேள்விகளுக்கு மட்டுமே நான் பதிலளிக்காத நிலையில், 7 கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஓ.எம்.ஆர். ஷீட்டை மாற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கு அசல் ஓ.எம்.ஆர். ஷீட்டை காண்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story