வேலூரில் பழங்குடி மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்: ‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் - சுப்பராயன் எம்.பி. பேட்டி


வேலூரில் பழங்குடி மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்: ‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் - சுப்பராயன் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 18 Oct 2020 8:15 PM IST (Updated: 18 Oct 2020 8:08 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று சுப்பராயன் எம்.பி. தெரிவித்தார்.

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜி.லதா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவராஜ், பொருளாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளரும், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சுப்பராயன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில், 2006-ம் ஆண்டு வன உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும், பழங்குடி மக்களுக்கு கொரோனா ஊரடங்கு காலத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். பீஞ்சமந்தை, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லை மலை ஊராட்சிப்பகுதிகளில் வனத்துறை சட்டத்தின் அடிப்படையில் கிராமசபை, வன உரிமை குழுக்களை அமைத்து மலைவாழ் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பட்ஜெட்டில் பழங்குடி மக்களுக்கு வழங்கும் நிதியை பழங்குடி மக்களுக்கே செலவு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு விரோதமாக உள்ள 3 வேளாண் சட்டங்கள், சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த அறிக்கை அனைத்தையும் திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் மலைவாழ் மக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் நன்றி கூறினார்.

பின்னர் சுப்பராயன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வு முறை என்பது வடிகட்டுகிற வர்ணாசிரம முறை. பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினர் தப்பி மேலே வந்து விடக்கூடாது என தடுக்கக்கூடிய உள்நோக்கம் கொண்ட நவீன வடிகட்டும் முறை தான் புதிய கல்விக் கொள்கை. அதில் பிரதானமானது தான் நீட் தேர்வு. இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மத்திய அரசின் திட்டம் இது. மத்திய அரசை அப்புறப்படுத்தும்வரை இந்த தீங்கு நீடிக்கும். இந்த ஆட்சி நீடிக்கும் வரை குழப்பங்கள் நீடிக்கும். நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும். இல்லையென்றால் சக்தி மிகுந்த அளவில் போராட்டம் நடைபெறும். அரசு பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி சட்டமசோதா போட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை ஒப்புதல் வழங்காமல் வைத்து என்ன செய்கிறார் கவர்னர்?. விரைவில் அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Next Story