கவர்னரின் சர்ச்சைக்குரிய கடிதம் குறித்து அமித்ஷாவின் கருத்துக்கு சிவசேனா வரவேற்பு


கவர்னரின் சர்ச்சைக்குரிய கடிதம் குறித்து அமித்ஷாவின் கருத்துக்கு சிவசேனா வரவேற்பு
x
தினத்தந்தி 18 Oct 2020 8:45 PM GMT (Updated: 18 Oct 2020 8:45 PM GMT)

கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியின் சர்ச்சைக்குரிய கடிதம் குறித்து அமித்ஷாவின் கருத்துக்கு சிவசேனா வரவேற்பு தொிவித்து உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், அவர் முதல்-மந்திரியை நீங்கள் திடீரென மதசார்பின்மைக்கு மாறிவிட்டீர்களா? என கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைதொடர்ந்து முதல்-மந்திரி, கவர்னர் இடையே வார்த்தை போர் வெடித்தது. மேலும் கவர்னரின் சர்ச்சைக்குரிய கடிதத்திற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்தது.

சிவசேனா வரவேற்பு

இந்த விவகாரம் குறித்து கருத்து கூறிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ‘கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி நல்ல வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கலாம்’ என கூறியிருந்தார். அமித்ஷாவின் இந்த கருத்தை சிவசேனா வரவேற்று உள்ளது.

இது குறித்து அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவுத் கூறியதாவது:-

கவர்னரின் கடிதத்தை தொடர்ந்து முதல்-மந்திரி பதில் அனுப்பியது தவிர்க்க முடியாத சர்ச்சையானது. நாங்கள் அதை தொடங்கவில்லை. ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை மந்திரியின் நிலைப்பாட்டில் திருப்தி அடைகிறோம். மேலும் அவர் எங்கள் கோபத்திற்கான காரணத்தை புரிந்து கொண்டதற்கு நன்றி கூறிகொள்கிறோம்.

இதேபோல அமித்ஷாவின் கருத்தில் அரசியல் எதுவும் இல்லை. இந்திய அரசியல் அமைப்பில் உள்ளதை தான் அவர் கூறியுள்ளார். இத்துடன் இந்த விவகாரத்தை முடித்து கொள்ள விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story