பெங்களூருவில் சாலையில் நடந்து சென்ற 5 பேரை சரமாரியாக கத்தியால் குத்திய தொழிலாளி வாலிபர் சாவு; 4 பேருக்கு சிகிச்சை


பெங்களூருவில் சாலையில் நடந்து சென்ற 5 பேரை சரமாரியாக கத்தியால் குத்திய தொழிலாளி வாலிபர் சாவு; 4 பேருக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 18 Oct 2020 9:12 PM GMT (Updated: 18 Oct 2020 9:12 PM GMT)

பெங்களூருவில் சாலையில் நடந்து சென்ற 5 பேரின் வயிற்றில், சரமாரியாக கத்தியால் தொழிலாளி ஒருவர் குத்தினார். இதில் வாலிபர் ஒருவர் இறந்தார். 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெங்களூரு,

பெங்களூரு காட்டன்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அஞ்சனப்பா கார்டன் பகுதியை சேர்ந்தவர் கணேஷ்(வயது 30). இவர் கூலி தொழிலாளி ஆவார். இந்த நிலையில் நேற்று காலை கணேஷ், அஞ்சனப்பா கார்டன் பகுதியில் உள்ள ஆட்டிறைச்சி கடைக்கு சென்று மட்டன் வாங்கினார். பின்னர் அவர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சாலையில் நடந்து சென்றவர்களை கணேஷ் தாக்கினார்.

மேலும் சாலையில் நடந்து சென்ற 5 பேரை அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் கத்தியால் வயிற்றில் குத்தினார். இதில் 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் கணேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வாலிபர் சாவு

ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் மாரி(30) என்பவர் இறந்து விட்டார். வேலாயுதம் என்பவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த காட்டன்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரித்தனர். பின்னர் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 5 பேரையும் கணேஷ் கத்தியால் குத்தும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த காட்சிகளின் அடிப்படையில் கணேசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 5 பேரையும் கணேஷ் எதற்காக கத்தியால் குத்தினார் என்பது தெரியவில்லை. அதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story