கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்


கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்
x
தினத்தந்தி 18 Oct 2020 9:22 PM GMT (Updated: 18 Oct 2020 9:22 PM GMT)

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலையொட்டி மனுக்களை வாபஸ் பெற இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள ராஜராஜேஸ்வரிநகர், சிரா ஆகிய தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. கடந்த 16-ந் தேதி மனுக்கள் பரிசீலனை முடிவடைந்தது. இதில் ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் 23 பேரும், சிரா தொகுதியில் 17 பேரும் மனு தாக்கல் செய்தனர்.

இதில் குறிப்பாக ராஜராஜேஸ்வரிநகரில் காங்கிரஸ் சார்பில் குசுமா, பா.ஜனதா சார்பில் முனிரத்னா, ஜனதா தளம் (எஸ்) சார்பில் கிருஷ்ணமூர்த்தி, சிரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி டி.பி.ஜெயச்சந்திரா, பா.ஜனதா சார்பில் ராஜேஸ்கவுடா, ஜனதா தளம் (எஸ்) சார்பில் அம்மாஜம்மா ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று முன்தினம் மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இந்த நிலையில் மனுக்களை வாபஸ் பெற இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.

மும்முனை போட்டி

இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது. இதில் 2 தொகுதிகளிலும் மும்முனை போட்டி நிலவுவது உறுதியாகிவிட்டது. இடைத்தேர்தலில் வெற்றி பெற 3 கட்சிகளுமே தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளன. நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

Next Story