கும்மிடிப்பூண்டி அருகே, மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; ஊராட்சி செயலாளர் பலி
கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மனைவியின் கண் எதிரே ஊராட்சி செயலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளுர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகா எல்லாபுரம் ஒன்றியத்தை சேர்ந்த பேரண்டூரை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (வயது 50). இவர் பேரண்டூர் ஊராட்சியின் செயலாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர், கும்மிடிப்பூண்டி அடுத்த நத்தம் கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு மனைவி புனிதா (45) உடன் சென்று விட்டு நேற்று காலை பேரண்டூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். கவரைப்பேட்டை அடுத்த புதுவாயல் மேம்பாலம் அருகே சாலையை கடப்பதற்காக தனது மனைவியை இறக்கி விட்டு சாலையின் மத்தியில் இருந்த தடுப்புகளின் வழியே தனது மோட்டார் சைக்கிளில் பாண்டுரங்கன் கடக்க முயன்றார்.
அப்போது அதே வழியாக ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு மினி லாரி, அவரது மோட்டார் சைக்கிளின் பின்னால் பயங்கரமாக மோதியது.
இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த அவர் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில், தலைநசுங்கி மனைவியின் கண் எதிரே சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த கவரைப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பலியான பேரண்டூர் ஊராட்சி செயலாளர் பாண்டுரங்கனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story