திருப்போரூர் அருகே, வாலிபர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை
திருப்போரூர் அருகே தனது அண்ணனின் நண்பரை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருப்போரூர்,
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த காயார் அருகே உள்ள மேல்கால்வாய் கிராமத்தை சேர்ந்தவர் தேவா(வயது 25). இவர், கடந்த 2 மாதத்துக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் உள்பட சில நண்பர்களுடன் தனது காரில் சென்றார்.
காரை தினேஷ்குமார் ஓட்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்த கார் விபத்துக்குள்ளானது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. தானே காரை ஓட்டி சேதப்படுத்தியதால் அதற்கு நஷ்டஈடாக ரூ.50 ஆயிரம் தருவதாக தினேஷ்குமார் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று தேவா, தனக்கு தருவதாக கூறிய பணத்தை வாங்குவதற்காக தினேஷ்குமார் வீட்டுக்கு சென்றார். ஆனால் வீட்டில் அவர் இல்லை. இதனால் அவரது தாயாரிடம் கேட்டார். அதற்கு அவர் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றார்.இதில் ஆத்திரம் அடைந்த தேவா, வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார். இதனால் தேவாவுக்கும், தினேஷ்குமாரின் தம்பி மோகன்ராஜ்(22) என்பவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மோகன்ராஜ், இரும்பு கம்பியால் தேவாவின் தலையில் பலமாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த தேவா, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி காயார் போலீ சார் வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story