ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வியாபாரி தீக்குளித்து தற்கொலை


ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வியாபாரி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 19 Oct 2020 4:04 AM IST (Updated: 19 Oct 2020 4:04 AM IST)
t-max-icont-min-icon

வில்லியனூர் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வியாபாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனூர்,

புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள கோர்க்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 36). தனியார் செல்போன் ரீசார்ஜ் கூப்பன் வினியோகஸ்தர் தொழில் செய்துவந்தார். இவருக்கு மதுமிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டம் பற்றி அறிந்த விஜயகுமார் அதில் விளையாட தொடங்கினார்.

தொடக்கத்தில் விஜய குமார் வெற்றி பெற்று பணம் சம்பாதித்ததால் சூதாட்டத்தின் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதனை விளையாடி வந்ததில் சிறுகச்சிறுக பணத்தை இழந்தார். ஒரு கட்டத்திற்கு சூதாட்டத்தில் இருந்து வெளியே வர முடியாமல் அடிமையானார். வீட்டில் இருந்த மனைவியின் நகைகள் மற்றும் வியாபாரத்திற்கு வைத்திருந்த பணத்தை அதில் இழந்தார். மேலும் பலரிடம் கடன் பெற்று சூதாட்டத்தில் ஈடுபட்டார். இவ்வாறு பல லட்சங்களை ஆன்லைன் சூதாட்டத்தில் விஜயகுமார் இழந்தார்.

கடன் தொல்லை

இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள், பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தனர். அதனை திருப்பி கொடுக்க முடியாமல் தவித்தார். பணம் இல்லாததால் தொழிலை சரியாக நடத்த முடியவில்லை. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே மனைவியிடம் கோபித்துகொண்டு விஜயகுமார் வீட்டைவிட்டு வெளியே சென்றார்.

நீண்ட நேரமாகியும் அவர் வராததால், குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். அவரது செல்போனை தொடர்பு கொண்டும், பேச முடியவில்லை. கணவர் பற்றிய தகவல் தெரியாததால் கவலை அடைந்த மதுமிதா நேற்று காலை கரிக்கலாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றார்.

தீக்குளித்து தற்கொலை

அப்போது கோர்க்காடு அருகே உள்ள நத்தமேடு ஏரிக்கரையில் ஆண் பிணம் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பிணத்தின் அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று நின்றது.

அதனுடைய பதிவு எண் கொண்டு விசாரித்தபோது, அது விஜயகுமாருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் என்பது தெரிய வந்தது. எனவே எரிந்த நிலையில் பிணமாக கிடப்பது விஜயகுமார் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதன்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மனைவிக்கு கடைசியாக அனுப்பிய வாட்ஸ்-அப் தகவல்

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயகுமாரின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதனால் ஏற்பட்ட கடன் தொல்லையால் அவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும் விஜயகுமார், கடைசியாக தனது செல்போனில் வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யுமாறு பதிவிட்டு இருந்தார். அவரது மனைவிக்கு கடைசியாக அனுப்பிய வாட்ஸ் அப்பில், என்னுடைய பிணத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் நிற்கும் என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன் தொல்லையில் வியாபாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story