புரட்டாசி முடிந்தது; ஐப்பசி பிறந்து முதல் ஞாயிற்றுக்கிழமை: மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது


புரட்டாசி முடிந்தது; ஐப்பசி பிறந்து முதல் ஞாயிற்றுக்கிழமை: மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 19 Oct 2020 4:16 AM IST (Updated: 19 Oct 2020 4:16 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி முடிவடைந்து ஐப்பசி பிறந்த முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னை,

பொதுவாக புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த புனிதமான மாதமாக கருதப்படுகிறது. இதனால், பெருமாளை வணங்கும் பக்தர்கள் தங்கள் வீடுகளில் புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவை தவிர்ப்பது வழக்கம். பெருமாள் பக்தர்களுடன் சிவன் உள்ளிட்ட பிற தெய்வங்களை வணங்கும் பெரும்பாலான பக்தர்களும் புரட்டாசி மாதத்தில் தங்கள் வீடுகளில் அசைவ உணவை பெரும்பாலும் தவிர்த்துவிடுவார்கள்.

இது அசைவ பிரியர்களை கட்டிப் போட்டது போல் இருக்கும். இதனால், அசைவ பிரியர்கள் புரட்டாசி மாதம் எப்போது முடியும், ஐப்பசி மாதம் எப்போது பிறக்கும் என்று காத்துக் கொண்டு இருப்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான புரட்டாசி மாதம் கடந்த 16-ந் தேதியுடன் (வெள்ளிக்கிழமையுடன்) முடிவடைந்தது. 17-ந் தேதி (சனிக்கிழமை) ஐப்பசி மாதம் பிறந்தது. எனினும் சனிக்கிழமை என்பதால் பெருமாள் பக்தர்கள் அன்றும் அசைவத்தை தவிர்த்தனர்.

இந்தநிலையில், நேற்று ஐப்பசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை, பட்டினப்பாக்கம், காவாங்கரை, வானகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. மீன் விற்பனையும் படு ஜோராக நடைபெற்றது.

மீன் விற்பனை குறித்து சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த மீன் வியாபாரி எம்.சி.பி.இளையராஜா கூறும்போது, “கடந்த ஒரு மாதத்திற்கு பின்னர் இன்று(நேற்று) தான் மீன் விற்பனை அதிகரித்து உள்ளது. வழக்கத்தை விட மீன் விற்பனை அதிகரித்த போதிலும், மீன்கள் விலை குறைவாகவே இருந்தது. இதனால், மக்களும் மகிழ்ச்சியுடன் மீன்களை வாங்கிச் சென்றனர்” என்றார்.

சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் நேற்றைய மீன் விலை நிலவரம் (கிலோவுக்கு) வருமாறு:-

வஞ்சிரம் மீன் ரூ.400- 550, வவ்வால் ரூ.250- 450, சங்கரா ரூ.200-300, சுறா ரூ.200-350, பாறை ரூ.200-350, நெத்திலி ரூ.250, மத்தி மீன் ரூ.160, கிழங்கா மீன் ரூ.450, கட்லா மீன் ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டன.

சிந்தாதிரிப் பேட்டை மட்டன் மார்க்கெட்டில் ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ.700-க்கும், ஒரு கிலோ கோழிக்கறி ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அங்கும் மக்கள் கூட்டம் அலை மோதியது. இதே போன்று சென்னையில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகளிலும் பெருமளவிலான மக்கள் இறைச்சியை வாங்கிச் சென்றனர்.

இது தவிர, சென்னையில் உள்ள பெரும்பாலான பிரியாணி கடைகளிலும் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.

Next Story