மழைக்காலத்தில் மின் விபத்துகளை தவிர்ப்பது எப்படி? மின்வாரியம் விளக்கம்


மழைக்காலத்தில் மின் விபத்துகளை தவிர்ப்பது எப்படி? மின்வாரியம் விளக்கம்
x
தினத்தந்தி 19 Oct 2020 4:17 AM IST (Updated: 19 Oct 2020 4:17 AM IST)
t-max-icont-min-icon

மழைக்காலத்தில் மின் விபத்துகளை தவிர்ப்பது எப்படி? என்பது குறித்து நெல்லை மின்வாரிய அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

நெல்லை,

பருவமழை காலத்தில் புயல் மற்றும் மழை, வெள்ளத்தின் காரணமாக மின் விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்படுவது அவசியமாகும். மின் விபத்துகளை தவிர்க்க, மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்ததாரர் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சாதனங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்.

மின்சார பிளக்குகளை பொருத்துவதற்கு முன்பும், எடுப்பதற்கு முன்பும் சுவிட்சை ‘ஆப்’ செய்ய வேண்டும். பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும். உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விட வேண்டும். பழுதடைந்த மின்சாதனங்களை பயன்படுத்த கூடாது.

கேபிள் டி.வி. வயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக் கூடாது. ஒவ்வொரு வீட்டுக்கும் சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போடுவதுடன், அதனை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாதவாறு அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும். சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வீட்டின் மின் வயரிங்கை சோதனை செய்து, தேவைப்பட்டால் மாற்றி கொள்ள வேண்டும். மின்கம்பத்திற்காக அமைக்கப்பட்ட தாங்கு கம்பியின் மீது, அல்லது மின்கம்பத்தின் மீது கொடி, கயிறு கட்டி, துணி காய வைக்க கூடாது. அவற்றில் கால்நடைகளை கட்டக் கூடாது. மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்த கூடாது. மின்கம்பத்தில் விளம்பர பலகை வைக்க கூடாது.

தண்ணீரால் அணைக்கக்கூடாது

குளியலறை, கழிப்பறையிலும், ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளை அமைக்க கூடாது. சுவரின் உள்பகுதியில் மின்சாரத்தை எடுத்து செல்லும் வயர்களுடன் கூடிய பி.வி.சி. பைப்புகள் பதிக்கப்பட்டு இருந்தால், அப்பகுதிகளில் ஆணி அடிக்க கூடாது. மழைக்காலத்தில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், தாங்கு கம்பிகளின் அருகில் செல்லக்கூடாது. மின்கம்பி அறுந்து விழுந்தால் உடனே மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்களை போதுமான இடைவெளி விட்டு கட்ட வேண்டும். மின்சாதனங்களை பயன்படுத்தாதபோது, மின் சுவிட்சுகளை ஆப் செய்து வைக்க வேண்டும். மின் தீ விபத்துகளின்போது, உலர்ந்த மணல், கம்பளி போர்வை, உலர்ந்த ரசாயன பொடி, கரியமில வாயு ஆகிய தீயணைப்பான்களை பயன்படுத்த வேண்டும். மின்சாரத்தினால் ஏற்பட்ட தீ விபத்துகளை தண்ணீரால் அணைக்க கூடாது. தீ விபத்து மின்சாரத்தினால் ஏற்பட்டால், உடனே மெயின் சுவிட்சை நிறுத்தி விட வேண்டும். இடி, மின்னல் ஏற்படும்போது திறந்தவெளியில் இருக்க கூடாது. அப்போது உடனடியாக கான்கிரீட் மேற்கூரையாலான கட்டிடம், வீடு போன்றவற்றுக்கு செல்ல வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story