கடந்த 7 நாட்களில் சென்னையில் கொரோனா பாதிப்பு 2.4 சதவீதம் குறைந்தது - மாநகராட்சி தகவல்


கடந்த 7 நாட்களில் சென்னையில் கொரோனா பாதிப்பு 2.4 சதவீதம் குறைந்தது - மாநகராட்சி தகவல்
x
தினத்தந்தி 19 Oct 2020 4:52 AM IST (Updated: 19 Oct 2020 4:52 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு 2.4 சதவீதம் குறைந்துள்ளது என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 5 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் பண்டிகை நாட்கள் நெருங்கி வருவதால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு 2.4 சதவீதமாக குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி இணையதள பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர் மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் கடந்த 7 நாட்களில் தலா 0.1 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் அடையாறு மண்டலத்தில் 0.7 சதவீதம், திருவொற்றியூர் மண்டலத்தில் 1.1 சதவீதம், கோடம்பாக்கம் மண்டலத்தில் 1.4 சதவீதம், அம்பத்தூர் மண்டலத்தில் 2.1 சதவீதம், மாதவரம் மண்டலத்தில் 2.3 சதவீதம், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 2.3 சதவீதமும், கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

மேலும் திரு.வி.க. நகர் மண்டலத்தில் 2.9 சதவீதம், தண்டையார் பேட்டை மண்டலத்தில் 3.8 சதவீதம், தேனாம்பேட்டை, பெருங்குடி மண்டலத்தில் தலா 4.1 சதவீதம், வளசரவாக்கம் மண்டலத்தில் 4.2 சதவீதம், மணலி மண்டலத்தில் 4.5 சதவீதம், ராயபுரம் மண்டலத்தில் 4.7 சதவீதம் என கடந்த 7 நாட்களில் மட்டும் சென்னையில் 2.4 சதவீதம் பாதிப்பு குறைந்துள்ளது.

தற்போது சென்னையில் 91 சதவீதம் பேர் பூரண குணமடைந்துள்ளனர். 7 சதவீதம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1.85 சதவீதம் பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். சென்னையில் மட்டும் 3,500 பேருக்கு மேல் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 450 பேர், அண்ணாநகரில் 395 பேர், கோடம்பாக்கத்தில் 386 பேர், திரு.வி.க நகரில் 360 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இதுவரை ஆண்கள் 61.25 சதவீதமும், பெண்கள் 38.75 சதவீதமும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக 30 முதல் 39 வயதினர் 18.65 சதவீதமும், 50 முதல் 59 வயதினர் 18.43 சதவீதம் பேர் ஆவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story