திருச்சி உறையூர் பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளின் அவலநிலை - வெக்காளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதி


திருச்சி உறையூர் பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளின் அவலநிலை - வெக்காளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 19 Oct 2020 11:16 AM IST (Updated: 19 Oct 2020 11:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி உறையூர் பகுதியில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. இதனால் வெக்காளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதிப்படுகிறார்கள்.

திருச்சி,

திருச்சி நகரில் சஞ்சீவி நகர், அரியமங்கலம், உறையூர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாம் கட்ட பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருச்சி மாநகராட்சி 60-வது வார்டை சேர்ந்த உறையூர் பாத்திமா நகர், தியாகராய நகர், ஏ.யு.டி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிக்காக குழிகள் தோண்டப்பட்டு, கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. இதற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக தோண்டி போடப்பட்டிருந்த குழிகள் குழாய்கள் பதிக்கும் பணிகள் முடிவடைந்ததும் மூடப்பட்டன. ஆனால் சரியான அளவில் காங்கிரீட் கலவை போட்டு அந்த குழிகள் மூடப்படாததால் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. இதன்காரணமாக அந்த சாலைகளின் வழியாக லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடிவதில்லை.

குண்டும் குழியுமாக சாலைகள் இருப்பதால் கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் செல்வோரும் தட்டுத்தடுமாறி தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக பணிக்க நாடார் தெரு சாலை குழுமணி சாலையிலிருந்து திருச்சி நகருக்குள் வெக்காளியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு வருவதற்கான முக்கிய இணைப்பு சாலையாக உள்ளது. இந்த சாலையில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டு சுமார் 2 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் மீண்டும் இங்கு தார் சாலை அமைக்கப்படவில்லை. அரைகுறையாக மூடப்பட்ட மண் பாதை போன்ற சாலை வழியாகத்தான் வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இந்த சாலையில் மணல் ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு லாரியின் சக்கரம் மண்ணில் புதைந்து ஒரு பக்கமாக சாய்ந்தது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் எவ்வளவோ முயன்றும் லாரியை நிமிர்த்த முடியவில்லை. இதனால் பொக்லைன் எந்திரம் கொண்டுவரப்பட்டு அதன் பின்னரே லாரி இழுத்துச் செல்லப்பட்டது.

லாரியின் சக்கரம் இன்னும் கொஞ்சம் மண்ணில் புதைந்து இருந்தால் லாரி கவிழ்ந்து வீடுகள் மீது விழுந்திருக்கும். உயிர்ப்பலி ஏற்பட்டிருக்கும். இந்த சாலையானது ஏராளமான குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் இணைப்பு சாலை ஆக இருப்பதாலும் வெக்காளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த சாலையை தான் முழுமையாக பயன்படுத்துவதாலும் வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளது.

ஆனால் மோசமான நிலையில் இந்த சாலை இருப்பதால் பக்தர்கள், குடியிருப்புவாசிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இந்த சாலையில் பாதாள சாக்கடை பணியின்போது தெரு கம்பங்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. அவையும் இன்னும் சீரமைக்கப்பட வில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலை முழுவதுமாக இருளில் மூழ்கிக் கிடக்கிறது. மேலும் மழை நீர் வடிகால், திறந்தவெளி சாக்கடை வாய்க்கால்களும் சரியாக பராமரிக்கப்படாததால் மோசமான நிலையில் உள்ளன.

இதனால் கார் உள்ளிட்ட வாகனங்கள் சாக்கடை கால்வாயில் சிக்கி கவிழக்கூடிய அபாயமும் உள்ளது. உறையூர் பகுதியில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் பல்வேறு இயக்கங்கள் சார்பில் ஏராளமான போராட்டங்களும் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனாலும் மாநகராட்சி நிர்வாகம் இதனை கண்டு கொள்ளவில்லை. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இதில் உடனடி கவனம் செலுத்தி சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story