சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 36 ஆயிரம் கிலோ திரவ ஆக்சிஜன் வாயு கலன் அமைப்பு


சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 36 ஆயிரம் கிலோ திரவ ஆக்சிஜன் வாயு கலன் அமைப்பு
x
தினத்தந்தி 19 Oct 2020 11:48 AM IST (Updated: 19 Oct 2020 11:48 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 36 ஆயிரம் கிலோ திரவ ஆக்சிஜன் வாயு கலன் அமைக்கப்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் தினமும் 250-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 500-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வயதான கொரோனா நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு உடனடியாக ஆக்சிஜன் கொடுக்கும் அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருப்பூர் அரசினர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் ஆக்சிஜன் வசதி இல்லாததால் போலீஸ் அதிகாரி ஒருவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக அனைத்து கொரோனா சிறப்பு வார்டுகளிலும் தட்டுப்பாடு இல்லாமல் ஆக்சிஜன் வசதி 24 மணி நேரமும் இருக்க வேண்டும் என நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதி தேவைப்படுவதால் ஏற்கனவே 6 ஆயிரம் கிலோ மற்றும் 12 ஆயிரம் கிலோ கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 360-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் இருப்பதால் அவர்களுக்கு ஆக்சிஜன் தேவைபட்டால் உடனடியாக கிடைக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, கோவையில் இருந்து தனியார் நிறுவனம் மூலம் 36 ஆயிரம் கிலோ கொண்ட திரவ ஆக்சிஜன் வாயு கலன் வரவழைக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டீன் அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா வார்டுகளுக்கு குழாய் மூலமாக நேரடியாக ஆக்சிஜன் கொண்டு செல்ல முடியும். மேலும் ஒவ்வொரு படுக்கைக்கும் ஆக்சிஜன் கொண்டு செல்வதற்கும் இது உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது அந்த ராட்சத ஆக்சிஜன் வாயு கலனில் இருந்து குழாய் மூலம் அனைத்து வார்டுகளுக்கும் ஆக்சிஜன் கொண்டு செல்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story