நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெண் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெண் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 19 Oct 2020 11:50 PM GMT (Updated: 19 Oct 2020 11:50 PM GMT)

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெண் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்திருந்தனர். நெல்லை டவுன் மணிபுரத்தைச் சேர்ந்த கர்ணன் மனைவி இசக்கியம்மாள் (வயது 37) என்பவர் தனது மகன்கள், மகள், மாமியார் ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.

அப்போது திடீரென இசக்கியம்மாள் தனது பையில் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கிருந்த போலீசார், அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினார்கள். பின்னர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க செய்தனர்.

கொலை மிரட்டல்

கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட பெட்டியில் இசக்கியம்மாள் தனது மனுவை போட்டார்.

அந்த மனுவில், ‘மேலப்பாளையம் கொக்கட்டிகுளத்தில் ரூ.30 ஆயிரம் கொடுத்து இலவச வீட்டுமனை இடத்தை வாங்கி வீடு கட்டி வருகிறேன். தற்போது சிலர் என்னிடம் தகராறு செய்து இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்து வீட்டை கட்டவிடாமல் தடுக்கிறார்கள். இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டு உள்ளது.

போலீசார் மீது புகார்

இதற்கிடையே, மேலப்பாளையம் ஆமீன்புரத்தைச் சேர்ந்த கோழி சுலைமான் (32) என்பவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கிருந்த போலீசார், அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றி கலெக்டர் அலுவலகத்திற்குள் அழைத்து வந்தனர்.

அப்போது அவர் கூறுகையில், ‘போலீசார் என் மீது பொய் வழக்குகளை பதிவு செய்கிறார்கள். இதனால் என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. இதனால் தான் தற்கொலை செய்ய வந்தேன். என்னை தூக்கில் போட்டு கொன்று விடுங்கள். என் மீது பொய் வழக்கு போடும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றார்.

பரபரப்பு

பின்னர் இசக்கியம்மாள், கோழி சுலைமான் ஆகிய 2 பேரையும் பாளையங்கோட்டை போலீசார் வேனில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் 2 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story