கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாநில துணை தலைவர் கோவிந்தம்மாள் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் நஞ்சுண்டன், மாவட்ட செயலாளர் புவனேஸ்வரி, பொருளாளர் கஸ்தூரி, நிர்வாகிகள் அலமேலு, ஸ்ரீதேவி, கவிதா, சுஜாதா, சிவகாமி, பார்வதி ஆகியோர் பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் 1992-ல் பணியில் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மினி மைய பணியாளர்களுக்கு 3 ஆண்டு முடிந்த உடனே பதவி உயர்வு வழங்க வேண்டும். எல்.கே.ஜி. வகுப்புகளில் அங்கன்வாடி ஊழியர்களை ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும். காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
அங்கன்வாடி திட்டத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை தவிர்க்க வேண்டும். 10 ஆண்டு முடிந்தவுடன் மேற்பார்வையாளராக பதவி உயர்வு, உதவியாளருக்கு 5 வருடம் முடிந்தவுடன் அங்கன்வாடி பணியாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும். காய்கறி செலவின தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story