கருப்பூரில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய சிறுவன் மீட்பு
கருப்பூரில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய சிறுவனை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கருப்பூர்,
சேலம் கருப்பூர் 2-வது வார்டு கொள்ளத்தெரு பகுதியில் வசித்து வருபவர் வரதராஜன் (வயது 31). இவரது மனைவி நித்தியா (30). இவர்களுக்கு கெவின் ராஜ் (7) என்ற மகனும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த தம்பதியினர் தங்களது பெண் குழந்தையை உறவினர் ஒருவர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தநிலையில் நேற்று வரதராஜன், நித்தியா வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் சிறுவன் கெவின் ராஜ் மட்டும் தனியாக இருந்தான்.
அப்போது திடீரென மின்கசிவு காரணமாக வீட்டில் தீ பிடித்தது. மள, மளவென பரவிய தீயை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவன், காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என கூச்சலிட்டான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடி வந்தனர். உடனடியாக அவர்கள் கருப்பூர் போலீஸ் நிலையம், ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்து, சிறுவனை மீட்டனர். இந்தநிலையில் வீட்டிலிருந்த ஆவணங்கள், தங்க தோடு, துணிகள் மற்றும் டி.வி., வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் என்று கூறப்படுகிறது.
தீ விபத்து தொடர்பாக கருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், தனபால் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story