கரூர் பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி மனு
கரூர் பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மனு அளித்தனர்.
கரூர்,
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமைதோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். தற்போது கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் பொருட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைத்து அதில் மனுக்கள் போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மகேஸ்வரன் தலைமையில் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் புகார் பெட்டியில் போட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-
கரூர் பஸ் நிலையத்தில் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாகவும், தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானபஸ்கள் வந்து செல்வதால் இடப்பற்றாக்குறை காரணமாக, கரூர் பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். கரூர் மாவட்டத்தில் மகளிர் தங்கும் விடுதியை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை சாகுபடி அதிகமாக உள்ளதால் அங்கு முருங்கை பவுடர் ஆலை அமைத்து கொடுக்க அரசு அனுமதித்தும் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பதால் அதை உடனடியாக அமைத்து தர வேண்டும்.
அதேபோல லாலாபேட்டையில் வாழைப்பழம் அதிகள அளவு உற்பத்தியாகிறது. இதனால் வாழைப்பழ ஜாம் தயாரிக்கும் ஆலையை அரசு அறிவித்தும் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பதால் அதை உடனடியாக அமைத்து தர வேண்டும். குளித்தலையில் புதிய பஸ் நிலையம் அமைத்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
தமிழ்நாடு ஏ.ஐ.சி.யூ.சி. கட்டிடத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பொது செயலாளர் வடிவேலன் புகார் பெட்டியில் போட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் தொழிலாளர்கள் பதிவு செய்வதும், ஏற்கனவே பதிவு செய்தவர்கள் பதிவை புதுப்பிப்பது இணையவழியில் நடைபெற்று வருகிறது. இந்த இணையவழி பதிவுக்கு தொழிலாளர்கள் ஆதார் எண்ணும் அதனுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் இருந்தால் மட்டுமே இப்பணியை செய்ய முடியும். ஏராளமான தொழிலாளர்கள் செல்போன் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை. இதனால் ஆதாருடன் கைப்பேசி எண் இணைக்க பதிவு மற்றும் புதுப்பிக்க போதுமான இ-சேவை மையங்கள் இல்லை.
அதனால் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்களில் கூடுதல் கணினிகள் நிறுவியும், மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் தேசியமயமாக்கபட்ட அனைத்து வங்கி கிளைகளிலும் ஆதார் உதவி மையங்களை நிறுவியும், அனைத்து தொழிலாளர்களும் தங்களது செல்போன் எண்ணை ஆதாருடன் இணைத்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story