போலீசார் பொய் வழக்கு பதிந்ததாக தற்கொலை மிரட்டல் விடுத்த கைதியால் பரபரப்பு
திருமங்கலத்தில் போலீசார் பொய் வழக்கு பதிந்ததாக கூறி தற்கொலை மிரட்டல் விடுத்த கைதியால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே உள்ள மறவன்குளத்தில் வாடகைக்கு வீடு பிடித்து விபசாரம் நடப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு, திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தியபோது விபசார புரோக்கர் மம்சாபுரம் சிவராமன் (வயது 34) என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். விபசார தொழிலில் ஈடுபட்டு இருந்த பெண்கள் இரண்டு பேர் மீட்கப்பட்டனர். அத்துடன் வீட்டில் புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட சிவராமன் கொடுத்த தகவலின் அடிப்படையில் வடபழஞ்சி அருகே உள்ள அடக்கம்பட்டியை சேர்ந்த துரைராஜ்(40) என்பவரை தேடிச் சென்றனர். கடையில் இருந்த துரைராஜ் போலீஸ் வருவதை அறிந்து தப்பிச்சென்றார். அங்கு இருந்த சில போதை பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்து கொண்டு வந்தனர். தப்பிச்சென்ற துரைராஜை, கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ரூ.9 ஆயிரம் மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட துரைராஜ் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். துரைராஜை மேலூர் கிளை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலூர் சிறைக்கு கொண்டு செல்லும்போது தற்கொலை செய்ய மாத்திரை சாப்பிட்டதாக கைதி தெரிவித்தார். இதனால் சிறை நிர்வாகம் அவரை ஏற்க மறுத்தது. மேலூர் அரசு மருத்துவமனையில் கைதியை பரிசோதித்தபோது நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மேலூர் ஜெயிலுக்கு கைதியை கொண்டு சென்றபோது ஏற்க மறுத்து விட்டனர். இதனையடுத்து திருமங்கலம் கிளை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கும் கைதி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் சிறை நிர்வாகம் கைதியை ஏற்றுக்கொள்ளவில்லை. சிறைவாசலின் முன்பு அமர்ந்திருந்த கைதி சுவற்றில் முட்டி தற்கொலை செய்ய முயற்சித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் கைதியிடம் சமாதானம் பேசினர். இதையடுத்து அவர் மீண்டும் திருமங்கல சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story