ஊழியர்கள் போராட்டம் எதிரொலி: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கட்டணமின்றி சென்ற வாகனங்கள் - டிரைவர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி


ஊழியர்கள் போராட்டம் எதிரொலி: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கட்டணமின்றி சென்ற வாகனங்கள் - டிரைவர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 19 Oct 2020 10:15 PM GMT (Updated: 20 Oct 2020 4:26 AM GMT)

சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கட்டணமின்றி வாகன ஓட்டிகள் சென்றனர். இதனால் டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி மற்றும் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடியில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர் சங்க கூட்டமைப்பு சார்பில் திருமாந்துறை சுங்கச்சாவடியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு சுங்கச்சாவடி பணியாளர் சங்க கூட்டமைப்பு மாநில தலைவர் காரல்மார்க்ஸ் தலைமை தாங்கினார்.

12 ஆண்டுகளாக சுங்கச்சாவடி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யாத நிர்வாகத்தை கண்டிப்பது, ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகள், ஊதியம் மற்றும் மருத்துவ வசதியை செய்து கொடுக்க வேண்டும், கடந்த 2017- ம் ஆண்டு போடப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் திருமாந்துறை மற்றும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்த கோஷங்களை எழுப்பினர். சுங்கச்சாவடி ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், மேற்கண்ட சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்க கட்டணம் வசூலிக்க யாரும் இல்லை. இதன் காரணமாக உளுந்தூர்பேட்டை, திருமாந்துறை சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் வாகன ஓட்டிகள் இலவசமாக சென்றனர். இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story