தேனியில் தடையை மீறி ஊர்வலம்-சாலை மறியல்: காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட 231 பேர் கைது - போலீசாருடன் தள்ளுமுள்ளு; போக்குவரத்து ஸ்தம்பித்தது
தேனியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தடையை மீறி ஊர்வலம் சென்ற காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட 231 பேர் கைது செய்யப்பட்டனர். தொண்டர்கள் மறியல் செய்ததோடு, போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மாவட்டந்தோறும் சென்று உழவன் உரிமை மீட்பு போராட்டங்களை நடத்தி வருகிறார். அதன்படி, தேனியில் நேற்று காங்கிரஸ் சார்பில் போராட்டம் மற்றும் டிராக்டரில் ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த ஊர்வலம் மற்றும் ஊர்வலத்தில் டிராக்டர்களை பயன்படுத்த மாவட்ட போலீஸ் நிர்வாகம் தரப்பில் தடை விதிக்கப்பட்டது. தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் மில் முன்பு இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி டிராக்டரில் ஊர்வலம் செல்ல காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டதால், தேனி நேரு சிலை வரை ஊர்வலமாக சென்று நேரு சிலைக்கு மாலை அணிவிக்க உள்ளதாக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். அதன்படி, அவரது தலைமையில் தொண்டர்கள் பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதி முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஊர்வலம் செல்ல அனுமதி மறுத்தனர். இருந்தபோதிலும் தடையை மீறி அவர்கள் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து தடையை மீறி ஊர்வலமாக சென்ற கே.எஸ்.அழகிரி மற்றும் நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து, போலீஸ் வேனில் ஏற்றினர். இதனால் போலீசாரை கண்டித்து காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கே.எஸ்.அழகிரி ஏற்றப்பட்டு இருந்த வேனை சுற்றிலும் சாலையில் அமர்ந்து தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கைது செய்து வேனில் ஏற்றப்பட்டு இருந்த அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜெபிமேத்தா வேனில் இருந்து இறங்கி வந்து தொண்டர்களுடன் மறியலில் ஈடுபட்டார். திடீரென்று அவர் சாலையில் படுத்து போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார். இதனால் தொண்டர்கள் மேலும் சிலர் சாலையில் படுத்து எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் ஆங்காங்கே குழுக்களாக மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்கு வரத்து பாதிக்கபட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றி வீரபாண்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். இதில் கே.எஸ்.அழகிரி உள்பட மொத்தம் 231 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story