பொள்ளாச்சி அருகே பரிதாபம்: குடும்பத்தகராறில் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை - காப்பாற்ற முயன்ற கணவரும் உயிரிழந்தார்


பொள்ளாச்சி அருகே பரிதாபம்: குடும்பத்தகராறில் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை - காப்பாற்ற முயன்ற கணவரும் உயிரிழந்தார்
x
தினத்தந்தி 20 Oct 2020 11:00 AM IST (Updated: 20 Oct 2020 10:31 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே குடும்பத்தகராறு காரணமாக இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற சென்ற கணவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். பொள்ளாச்சி அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தேவம்பாடிவலசு கிராமத்தை சேர்ந்தவர் பிரபு குமார் (வயது 25). கூலித்தொழிலாளியான இவருக்கும், இவருடைய முறை பெண்ணான நந்தினிக்கும் (22) கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு சிவகுமார் (3) என்கிற மகன் உள்ளான். பிரபுகுமார் தனது குடும்பத்துடன் தனியார் தோட்டம் ஒன்றில் குடியிருந்து வந்தார்.

கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு பிரபு குமார் மது குடித்துவிட்டு வந்தார். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் விரக்தி அடைந்த நந்தினி, இனி கணவருடன் சேர்ந்து வாழ்வதைவிட, சாவதே மேல் என்று கூறிவிட்டு வீட்டின் அருகே தோட்டத்தில் இருந்த கிணற்றை நோக்கி ஓடினார். இதை பார்த்த பிரபுகுமார், மனைவியை தடுக்க அவருக்கு பின்னால் ஓடினார். அதற்குள் நந்தினி கிணற்றில் குதித்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு குமார், தனது மனைவியை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்தார். இதற்கிடையே சத்தம் கேட்டு அவர்களது உறவினரான மகேந்திரகுமார் (17) என்பவர் ஓடி வந்தார். அதற்குள் இரண்டு பேரும் நீரில் மூழ்கி விட்டனர். இதுகுறித்து தோட்டத்து உரிமையாளர், வடக்கிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இரவு நேரமாகி விட்டதால் அவர்களது உடல்களை கிணற்றில் இருந்து மீட்பது சிரமமாக இருந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அதிகாலை 4 மணிக்கு பிரபு குமார், நந்தினி ஆகியோரது உடல்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டன. பின்னர் இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story