ஊட்டி அருகே சம்பவம்: மின்சாரம் தாக்கி உயிரிழந்த காட்டு யானையை புதைத்த 3 பேர் கைது - வனத்துறையினர் நடவடிக்கை
ஊட்டி அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த காட்டு யானையை புதைத்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி வடக்கு வனச்சரகத்துக்கு உட்பட்டது சின்ன குன்னூர் பகுதி ஆகும். சீகூர் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி சின்ன குன்னூர் கிராமத்துக்குள் அவ்வப்போது நுழைந்து வருகின்றது. இந்த நிலையில் அங்கு தனியார் நிலத்தை குத்தகைக்கு எடுத்து காய்கறி விவசாயம் செய்து வந்த ஒருவர் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வராமல் இருக்க தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்து இருந்தார். இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் வனத்துறையினர், வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சமீபத்தில் உணவு தேடி வந்த ஆண் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட வன அதிகாரி குருசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து உதவி வன பாதுகாவலர் சரவணன் மேற்பார்வையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. அது 20 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஆகும். மின்சாரம் தாக்கி இறந்த ஆண் காட்டு யானை வெளியே யாருக்கும் தெரியாமல் இருக்க தனியார் பட்டா நிலத்தில் குழிதோண்டி புதைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. யானை மீது மண் மூடப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடந்து இருக்கலாம் என்று தெரிகிறது.
இது தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், சின்ன குன்னூர் அருகே பெந்தட்டி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ்வரன் (வயது 40), கோபாலகிருஷ்ணன் (20), அஜித்குமார் (18) என்பதும், அவர்கள் இறந்த யானையை புதைத்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். ஊட்டி வடக்கு வனச்சரக அலுவலகத்தில் அவர்களை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து உதவி வன பாதுகாவலர் சரவணன் கூறும்போது, இறந்த ஆண் காட்டு யானை நாளை (அதாவது இன்று) டாக்டர்கள் மூலம் முறைப்படி பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மேலும் விவரங்கள் தெரியவரும் என்றார்.
Related Tags :
Next Story