சாலைவரியை ரத்துசெய்யக்கோரி ஐகோர்ட்டில் தனியார் பஸ் அதிபர்கள் வழக்கு


சாலைவரியை ரத்துசெய்யக்கோரி ஐகோர்ட்டில் தனியார் பஸ் அதிபர்கள் வழக்கு
x
தினத்தந்தி 20 Oct 2020 10:03 PM GMT (Updated: 20 Oct 2020 10:03 PM GMT)

சாலைவரியை ரத்துசெய்யக்கோரி தனியார் பஸ் அதிபர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

புதுச்சேரி,

புதுவையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுப்போக்குவரத்து உள்பட அனைத்தும் தடை செய்யப்பட்டன.

இதன் காரணமாக புதுவையில் இதுவரை தனியார் பஸ்கள் ஓடாத நிலை இருந்து வருகிறது. இந்தநிலையில் ஊரடங்கு தளர்வில் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பின் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

சாலைவரி

ஆனால் தனியார் பஸ் அதிபர்கள் யாரும் பஸ்சை இயக்கவில்லை. இதற்கிடையே கடந்த 5-ந்தேதி முதல் தமிழகத்தில் தனியார் பஸ்களை இயக்கி வருகின்றனர். இதைத்தொடர்ந்து புதுவையிலும் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறைந்த எண்ணிக்கையில் பஸ்களை இயக்கினால் நஷ்டம் ஏற்படும் என அதன் உரிமையாளர்கள் மறுத்து வருகின்றனர்.

புதுவையை பொறுத்தவரை அதிக அளவில் தனியார் பஸ்களே இயக்கப்பட்டு வந்தன. இவை ஓடாமல் இருப்பதால் கிராமப்புற மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். பஸ்கள் இயக்கப்படாத நிலையில் ஊரடங்கு காலத்துக்கான சாலை வரியை ரத்துசெய்யும் வரை தங்கள் பஸ்களை இயக்கப்போவதில்லை என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஐகோர்ட்டில் வழக்கு

ஆனால் அரசு சார்பில் இதுவரை சாலைவரியை ரத்துசெய்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் சாலைவரியை ரத்துசெய்யக்கோரி தனியார் பஸ் உரிமையாளர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு அடுத்த மாதம் 11-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது.

இதற்கிடையே சாலை வரியை அரசு ரத்து செய்தால் தனியார் பஸ் உரிமையாளர்கள் தங்களது வழக்கினை வாபஸ்பெற்று பஸ்களை ஓட்டவும் தயாராக உள்ளனர். சாலைவரி காலாவதியாகாத ஒரேயொரு தனியார் பஸ் மட்டும் புதுவையில் ஓடுகிறது.

Next Story