தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு


தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Oct 2020 6:05 AM IST (Updated: 21 Oct 2020 6:05 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ரவுடி சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேர் கொண்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி என்.ஜி.ஓ. காலனி கணேஷ் நகரை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் கதிரேசன் (வயது 31). பெயிண்டரான இவர் கூலித்தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்தார். கதிரேசன் மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம், நெல்லை மாவட்டம் திசையன்விளை ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை வழக்குகளும் உள்ளன.

இதுதவிர பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் வழக்கு நிலுவையில் உள்ளது. ரவுடியான இவர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தென்பாகம் போலீஸ் நிலையத்தில் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார்.

வெட்டிக் கொலை

இந்த நிலையில் நேற்று காலையில் தூத்துக்குடி மீளவிட்டான் சாலையில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் கதிரேசன் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, சிப்காட் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விமலா, சப்-இன்ஸ்பெக்டர் கள் பாலன், சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

சம்பவ இடத்தில் காலி மதுபாட்டில்களும், கதிரேசனின் செல்போனும் கிடந்தன. இதனை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

5 பேர் கும்பல்

கதிரேசனை சுமார் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் தூத்துக்குடியில் மது குடிக்க வைத்து உள்ளனர். பின்னர் அவரை அங்கிருந்து மீளவிட்டான் சாலையில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்தும் அனைவரும் மதுகுடித்து உள்ளனர். இதில் கதிரேசனுக்கு போதை அதிகரித்ததால் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் கதிரேசனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் மர்ம கும்பல் அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டது. மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

எனினும் கொலைக்கான காரணம் குறித்து முழு விவரம் தெரியவில்லை. மர்ம கும்பல் பிடிபட்ட பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

பரபரப்பு

இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தூத்துக்குடியில் ரவுடி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story