திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்கள் உண்ணாவிரதம் வாபஸ் - பேச்சுவார்த்தையில் உடன்பாடு


திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்கள் உண்ணாவிரதம் வாபஸ் - பேச்சுவார்த்தையில் உடன்பாடு
x
தினத்தந்தி 21 Oct 2020 3:45 AM IST (Updated: 21 Oct 2020 8:43 AM IST)
t-max-icont-min-icon

திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்கள் 2-வது நாளாக நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்தது.

மங்களமேடு,

திருச்சியை சேர்ந்த ஒரு நிறுவனம் கடந்த 12 ஆண்டுகளாக திருமாந்துறை மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளை ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் சுங்கச்சாவடிகளை துணை ஒப்பந்த முறையில் பல்வேறு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் இந்த சுங்கச்சாவடிகளில் பணிபுரியும் சுமார் 250 ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகள், ஊதியம் மற்றும் மருத்துவ வசதிகள் எதுவும் முறையாக செய்து தரப்படவில்லை என்று கூறி, அதை கண்டித்து திருமாந்துறை சுங்கச்சாவடி அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர். நேற்று இரண்டாவது நாளாக போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று மதியம் மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் ராஜேந்திரன், வேப்பூர் ஒன்றியக்குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாநில தி.மு.க. பொதுச்செயலாளர் காரல் மார்க்ஸ், துணைச் செயலாளர் விஜயகுமார் மற்றும் டி.டி.பி.எல். நிர்வாகத்தின் சார்பில் திட்ட மேலாளர் கருணாகரன், முதுநிலை மேலாளர் லோகேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்ட முடிவை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர். குன்னம் தாசில்தார் சின்னதுரை, வருவாய் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் நிர்வாகத்தினர் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர். போராட்டத்தையொட்டி மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன் (பொறுப்பு), இன்ஸ்பெக்டர் கலா மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

Next Story