மதுரையில் பட்டப்பகலில் கட்டுமான வேலை நடந்த வீட்டில் தொழிலாளியை வெட்டிக்கொன்ற கும்பல் - ஆள்மாறாட்டத்தில் நடந்த பயங்கரமா?
மதுரையில் கட்டுமான வேலை நடந்த வீட்டில் தொழிலாளியை சரமாரியாக வெட்டிக்கொன்று 7 பேர் கும்பல் வெறிச்செயலில் ஈடுபட்டது. ஆள்மாறாட்டத்தில் இந்த பயங்கரம் நடந்ததா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.
மதுரை,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள முக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை. அவருடைய மகன் பாரதி (வயது 22), கட்டிட தொழிலாளி. இவர் மதுரை வில்லாபுரம் கணக்குப்பிள்ளை தெருவை சேர்ந்த குணசேகரன் என்பவரின் வீட்டுக்கு கட்டுமான பணிக்காக வந்திருந்தார். நேற்று ஆழ்துளை கிணறு அமைக்கும் வேலை நடந்தது. அங்கு பாரதி தனது மாமாவுடன் சேர்ந்து வேலையில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 7 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்தது. அந்த கும்பலை கண்ட உடன் பாரதி அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி ஆயுதங்களால் தாக்கியது. பின்னர் அவர் கட்டிட பணி நடைபெறும் வீட்டிற்குள் புகுந்தார். அவரை பின்தொடர்ந்து சென்ற கும்பல் அந்த கட்டிடத்திற்குள்ளேயே பாரதியை சரமாரியாக வெட்டிக் கொன்றது.
பின்னர் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தகவல் அறிந்ததும் கீரைத்துறை போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் பாரதியின் உடலை பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் பழனிக்குமார் மற்றும் தனிப்படை போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர்.
இது குறித்து போலீசார் கூறும் போது, “கொலை செய்யப்பட்ட பாரதி மீது திருப்புவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள போலீஸ் நிலையங்களில் சில வழக்குகள் உள்ளன. மேலும் அந்த பகுதியில் சில மோதல்களில் அவர் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இது தவிர வேறு ஒருவரை கொலை செய்வதற்காக வந்த கும்பல் பாரதியை ஆள்மாறாட்டத்தில் கொலை செய்து விட்டதாகவும் தகவல் வெளியானது. எனவே கொலையாளிகளில் யாரேனும் பிடிபட்டவுடன் உண்மையான காரணம் என்ன? என்பது தெரியவரும். அவர்களை தேடி தனிப்படை போலீசார் சிவகங்கை மாவட்டத்திற்கு சென்றுள்ளனர்” என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story