வத்திராயிருப்பு அருகே, கண்டெடுக்கப்பட்ட நடுகல்லை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் - பொது மக்கள் கோரிக்கை


வத்திராயிருப்பு அருகே, கண்டெடுக்கப்பட்ட நடுகல்லை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் - பொது மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 21 Oct 2020 5:12 AM GMT (Updated: 21 Oct 2020 5:12 AM GMT)

வத்திராயிருப்பு அருகே கண்டெடுக்கப்பட்ட நடுகல்லை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுரக்காய்பட்டி கிராமத்தில் கி.பி. 15-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிகுத்தி வீரரின் நடுகல் மற்றும் மண்டபமும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டது.

தமிழர்களின் வரலாற்று தகவல்களை ஆவணப்படுத்தும் முயற்சியாக முதுமக்கள் தாழிகள் மற்றும் நடுகற்களை தேடும் பணியில் பல்வேறு ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தற்போது வத்திராயிருப்பு அருகே சுரக்காய்பட்டி பகுதியில் புலியை குத்திக்கொன்ற வீரனின் புலிக்குத்தி நடுகல்லும், புலியை குத்திக்கொன்ற வீரனை மன்னர் வணங்கும் கற்சிலை, மண்டபம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டது.

அந்த நடு கல்லில் வேட்டைக்கு செல்லும் வீரர் புலியை குத்துக் கம்பால் குத்தும்போது புலி வலி தாங்காமல் வாயை திறப்பதை போன்றும், அவருடன் சென்ற நாய் புலியை கடிப்பது போன்றும் உள்ளது.

பொதுவாக வீரர்கள் அணியும் மரவரி உடையும், ஆடையில் குறுவாளும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வலது பக்கம் அல்லி முடிந்த கொண்டையிட்ட 3 பெண்கள் அருகில் நிற்கின்றனர். மேலும் தெற்கு புறத்தில் உள்ள கற்சிலை ஒன்றில் நின்று வணங்குவதாகவும் ஒரு நடுக்கல் உள்ளது.

நடுக்கற்களுக்கு அருகே உள்ள புலிகுத்தி மண்டபம் இடிந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே, தொன்மையை பாதுகாக்க நடுகற்களை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தும், மண்டபத்தையும் சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story