மனைவி புகாரில், போலீஸ் விசாரணைக்கு சென்று திரும்பிய என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - உறவினர்கள் மறியல்-பரபரப்பு


மனைவி புகாரில், போலீஸ் விசாரணைக்கு சென்று திரும்பிய என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - உறவினர்கள் மறியல்-பரபரப்பு
x
தினத்தந்தி 21 Oct 2020 11:30 AM IST (Updated: 21 Oct 2020 11:21 AM IST)
t-max-icont-min-icon

மனைவி புகாரின் பேரில், போலீஸ் விசாரணைக்கு சென்று திரும்பிய என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி,

பழனி அருகே உள்ள பெரியகலையம்புத்தூரை சேர்ந்தவர் இம்ரான்கான் (வயது 29) . என்ஜினீயர். இவருக்கும் ஆயக்குடியை சேர்ந்த முன்சல்மா (26) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 4 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்சல்மா குடும்பத்தினர் பழனி அனைத்து மகளிர் போலீசில், இம்ரான்கான் மீது புகார் கொடுத்தனர். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் தேன்மொழி இருதரப்பினரையும் அழைத்து விசாரித்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை இம்ரான்கான் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து பழனி தாலுகா போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே நேற்று காலை இம்ரான்கானின் உறவினர்கள் அவரது உடலை வாங்குவதற்காக பழனி அரசு மருத்துவமனையில் குவிந்தனர். பின்னர் அவர்கள் திடீரென பழனி அரசு மருத்துவமனை முன் பழனி-திண்டுக்கல் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த பழனி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, விசாரணைக்காக பழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சென்ற இம்ரான்கானை மனைவியின் குடும்பத்தினர் தகாத வார்த்தைகளால் திட்டியதாலும், போலீசார் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாலும் இம்ரான்கான் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டார். எனவே அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி கூறினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் பழனி-திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story