நிலக்கோட்டை அருகே லாரி-கார் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாப சாவு


நிலக்கோட்டை அருகே லாரி-கார் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 21 Oct 2020 6:15 AM GMT (Updated: 21 Oct 2020 6:15 AM GMT)

நிலக்கோட்டை அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நிலக்கோட்டை,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் எஸ்.எஸ். காலனியை சேர்ந்தவர் சவுமி நாராயணன் (வயது 41). டி.வி. மெக்கானிக். இவர் தனது மனைவி திவ்யா (35), அக்காள் சுபா (47), சுபாவின் மகன் ஸ்ரீராம் (15) ஆகியோருடன் கொடைக்கானலில் இருந்து மதுரைக்கு காரில் சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து காரில் நேற்று கொடைக்கானலுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். மாலை 5 மணியளவில் நிலக்கோட்டையை அடுத்த மணியகாரன்பட்டி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே கார் வந்து கொண்டிருந்தது.

அப்போது வத்தலக்குண்டுவில் இருந்து பள்ளப்பட்டி அருகே உள்ள சிப்காட்டுக்கு ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. இந்தசமயத்தில் அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் ஒருவர் திடீரென பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு திரும்பினார். இதை சற்றும் எதிர்பாராததால் லாரிடிரைவர் நிலைகுலைந்தார். இதையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி, கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் காரில் பயணம் செய்த சவுமி நாராயணன், சுபா, ஸ்ரீராம் ஆகிய 3 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக இறந்தனர். விபத்து நடந்தவுடன் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு அதன் டிரைவர் தப்பியோடி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும் நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் காரில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய திவ்யாவை மீட்டு உடனடியாக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்தில் பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்து பற்றி அறிந்ததும் நிலக்கோட்டை தாசில்தார் யூஜின் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார் கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story