மதியம்பட்டி திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவுகள் கலப்பதால் விவசாயம் பாதிப்பு - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


மதியம்பட்டி திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவுகள் கலப்பதால் விவசாயம் பாதிப்பு - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 21 Oct 2020 11:55 AM GMT (Updated: 21 Oct 2020 11:55 AM GMT)

மதியம்பட்டி திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவுகள் கலந்து வரும் தண்ணீரால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெண்ணந்தூர்,

சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அங்கிருந்து வரும் தண்ணீர் திருமணிமுத்தாறு வழியாக கொண்டலாம்பட்டி, பூலாவரி வழியாக சென்று மின்னக்கல் ஏரிக்கு வந்தடைகிறது. அங்கிருந்து கட்டிபாளையம் போன்ற ஏரிகள் நிரம்பி வெண்ணந்தூர் அருகே மதியம்பட்டி வழியாக காவிரி ஆற்றுக்கு செல்கிறது.

தற்போது கால்வாய்கள் தூர்வாரப்படாததால் அதில் ஆகாயத்தாமரை படர்ந்து ஆங்காங்கே நீர் வெளியேறுவதுடன், சாயக்கழிவுகளும் கலந்து மழைநீர் கருப்பு நிறமாக அதிக துர்நாற்றத்துடன் திருமணிமுத்தாற்றில் கலந்து செல்வதால் மதியம்பட்டி, கல்கட்டானூர், அக்கரைபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் நீர் ஆதாரம் பாதிப்படைந்துள்ளது.

மேலும் விவசாயமும் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், நாங்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கிறோம். தற்போது கடந்த சில ஆண்டுகளாக சாயப்பட்டறை கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் கால்வாய்களில் கலப்பதால் அங்கிருந்து வரும் தண்ணீர் முற்றிலும் மாசு ஏற்பட்டு நுங்கும், நுரையுமாக வருகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதே நிலை நீடித்தால் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாயக்கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story