மாவட்ட செய்திகள்

திண்டிவனம் அருகே விபத்து: லாரி மீது ஷேர் ஆட்டோ மோதல் - சிறுமி உள்பட 2 பேர் பலி 11 பேர் படுகாயம் + "||" + Accident near Tindivanam Share auto collision on truck Two people were killed, including a girl 11 people were injured

திண்டிவனம் அருகே விபத்து: லாரி மீது ஷேர் ஆட்டோ மோதல் - சிறுமி உள்பட 2 பேர் பலி 11 பேர் படுகாயம்

திண்டிவனம் அருகே விபத்து: லாரி மீது ஷேர் ஆட்டோ மோதல் - சிறுமி உள்பட 2 பேர் பலி 11 பேர் படுகாயம்
வானூர் அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது ஷேர் ஆட்டோ மோதியதில் சிறுமி உள்பட 2 பேர் பலியானார்கள். 11 பேர் படுகாயமடைந்தனர்.
வானூர்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிளியனூர் அண்ணாநகரை சேர்ந்தவர்கள் மாணிக்கவாசகம் மகள் அங்காளபரமேஸ்வரி (வயது 14), உதயன் மனைவி ஞானவள்ளி(22), மோகன் மகள் சூர்யா(14), ஞானசேகர் மனைவி ஜமுனா(37), பச்சையப்பன் மகள் மீனா, மணிகண்டன் மனைவி காமாட்சி(19), ஆறுமுகம் மகள் சரளா(15), ராஜாங்கம் மகள்கள் வெண்ணிலா(19), ஸ்ரீமதி(16), வெங்கடேசன் மனைவி வரலட்சுமி(37), மோகன் மகள் கிருத்திகா(19), ஏழுமலை மகள் விஜயலட்சுமி(16), சுகுனேசன் மகள் சிவபூசனம் ஆகியோர் புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் அட்டை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்கள். இவர்கள் தினமும் கிளியனூரில் இருந்து தனியார் நிறுவனத்துக்கு ஷேர் ஆட்டோவில் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.


அதன்படி நேற்று காலையிலும் அவர்கள் வேலைக்கு சென்றனர். பின்னர் மாலையில் வேலை முடிந்ததும் 13 பேரும் ஷேர் ஆட்டோவில் கிளியனூருக்கு புறப்பட்டனர். இந்த ஷேர் ஆட்டோவை பாப்பாஞ்சாவடியை சேர்ந்த காத்தவராயன் மகன் ஜீவா என்கிற அய்யப்பன்(20) என்பவர் ஓட்டினார்.

புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் வழிச்சாலையில் தைலாபுரம் மெயின்ரோடு அருகே சென்றபோது, சாலையோரம் நின்ற லாரி மீது ஷேர் ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த கோர விபத்தில் ஆட்டோ உருக்குலைந்து போனது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 13 பெண்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். சாலையில் காயமடைந்து கிடந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் அங்காளபரமேஸ்வரி, ஞானவள்ளி ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து காரணமாக கிளியனூர் மெயின்ரோடு பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை பார்க்க அவரது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டதால் ஜிப்மர் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. விபத்து குறித்து கிளியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.