கர்நாடகாவில் மழை எதிரொலி: திருப்பூரில் வெங்காயம் விலை ‘கிடு கிடு’ உயர்வு கிலோ ரூ.100-க்கு விற்பனை


கர்நாடகாவில் மழை எதிரொலி: திருப்பூரில் வெங்காயம் விலை ‘கிடு கிடு’ உயர்வு கிலோ ரூ.100-க்கு விற்பனை
x
தினத்தந்தி 21 Oct 2020 3:47 PM GMT (Updated: 21 Oct 2020 3:47 PM GMT)

கர்நாடக மாநிலத்தில் மழை பெய்து வருவதால் திருப்பூருக்கு பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்து விலை கிடுகிடுவென்று உயர்ந்தது. இதன் காரணமாக நேற்று வெங்காயம் கிலோ ரூ.100-க்கு விற்பனையானது.

திருப்பூர்,

திருப்பூர்-பல்லடம் ரோட்டில் உள்ள தென்னம்பாளையம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஆகியவை மொத்த மற்றும் சில்லரை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெளி மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வரும் வெங்காயத்தின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக விலை உயர்ந்து உள்ளது.

இது குறித்து தென்னம்பாளையம் மார்க்கெட் மொத்த வெங்காய வியாபாரி மனோகரன் கூறியதாவது:-

கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு வரும் பெரிய வெங்காயத்தின் வரத்து மிகவும் குறைந்துள்ளது. வழக்கமாக கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூர், ஹாசன், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தினசரி 100 டன் பெரிய வெங்காயம் வரும் நிலையில் தற்போது 20 டன் மட்டுமே பெரிய வெங்காயம் வருகிறது. கடந்த 20 நாட்களாக வெங்காயத்தின் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. இன்னும் சில தினங்களில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வெங்காயத்தின் வரத்து முற்றிலும் குறைய வாய்ப்பு உள்ளது.

இதேபோல் மராட்டிய மாநிலம் அகமத் நகர், நாசிக் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தினசரி திருப்பூருக்கு 100 டன் வெங்காயம் வரும் ஆனால் தற்போது அங்கிருந்தும் சுமார் 20 டன் வெங்காயம் மட்டுமே வருகிறது. திருப்பூருக்கு வெங்காயத்தின் வரத்து வெகுவாக குறைந்து உள்ள காரணத்தால் நேற்று முன்தினம் கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் நேற்று மொத்த விற்பனை விலையாக ரூ.95 முதல் ரூ.100 வரைக்கும் விற்பனையானது.

மராட்டிய மாநிலத்தில் உள்ள மொத்த வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்கிவைக்கின்றனர். இதேபோல் திருப்பூரிலும் சில வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்கி வைத்ததாக தெரிகிறது. இன்னும் சில நாட்களில் வெங்காயத்தின் விலை கடந்த ஆண்டைப் போன்று உச்சத்தை அடைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பூரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெரிய வெங்காயம் கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.100-ஐ எட்டியுள்ளதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். தற்போது நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகள் வரும் நிலையில் வெங்காயத்தின் தேவை அதிகமாக இருக்கும்.

எனவே வெங்காயம் பதுக்கி வைக்கப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Next Story