ஈரோடு அருகே, ரெயில்வே நுழைவு பால இரும்பு தடுப்பில் சிக்கிக்கொண்ட லாரியால் போக்குவரத்துக்கு இடையூறு


ஈரோடு அருகே, ரெயில்வே நுழைவு பால இரும்பு தடுப்பில் சிக்கிக்கொண்ட லாரியால் போக்குவரத்துக்கு இடையூறு
x
தினத்தந்தி 21 Oct 2020 8:55 PM GMT (Updated: 2020-10-22T02:25:04+05:30)

ஈரோடு அருகே ரெயில்வே நுழைவு பாலத்தின் இரும்பு தடுப்பில் லாரி சிக்கிக்கொண்டது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

சென்னிமலை,

ஈரோடு-சென்னிமலை ரோட்டில் கே.கே நகர் அருகில் உள்ளது ரெயில்வே நுழைவு பாலம். இது குறுகிய பாலமாக இருப்பதால் இந்த வழியாக உயரமான கனரக வாகனங்கள் செல்ல முடியாது. மேலும் பாலத்துக்கு முன்பாக இரு புறமும் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரும்பு தடுப்புகளை தாண்டியும் உயரமான வாகனங்கள் எதுவும் பாலத்துக்குள் நுழைய இயலாது.

ஆனால் சில உயரமான வாகனங்கள் விதிமுறையை மீறி இந்த வழியாக செல்ல முயற்சிப்பது உண்டு. அப்படி செல்லும்போது அந்த இரும்பு தடுப்புக்குள் வாகனங்கள் சிக்கி கொள்ளும்.

சிக்கிக்கொண்ட லாரி

இந்த நிலையில் நேற்று மதியம் ஈரோட்டில் இருந்து ரெயில்வே நுழைவு பாலம் வழியாக ஒரு உயரமான லாரி சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த லாரி இரும்பு தடுப்பில் சிக்கிக் கொண்டது. இதனால் லாரியை டிரைவர் முன்னேயும், பின்னேயும் நகர்த்த போராடினார். சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு இரும்பு தடுப்பில் இருந்து லாரி வெளியே வந்தது. அதன்பின்னரே லாரி அங்கிருந்து சென்றது. இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பெரும்பாலான உயரமான கனரக வாகனங்கள் விதிமுறையை மீறி நுழைவு பாலத்தின் வழியாக செல்ல முயற்சிக்கும் போது இந்த இரும்பு தடுப்பில் சிக்கிக் கொள்கிறது. அப்போது இந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அதனால் கனரக வாகன ஓட்டுனர்கள் இரும்புத் தடுப்பை கடந்து தங்களது வாகனங்கள் செல்ல முடியுமா என்பதை முன் கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும்’ என்றனர்.

Next Story