புற்றுநோய்க்கு எதிரான போரில் வெற்றி நடிகர் சஞ்சய் தத் மகிழ்ச்சி


புற்றுநோய்க்கு எதிரான போரில் வெற்றி நடிகர் சஞ்சய் தத் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 21 Oct 2020 9:33 PM GMT (Updated: 21 Oct 2020 9:33 PM GMT)

புற்றுநோய்க்கு எதிரான போரில் வெற்றி பெற்றதாக நடிகர் சஞ்சய் தத் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

மும்பை,

இந்தி திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சஞ்சய் தத். 61 வயதான இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து நடிகர் சஞ்சய் தத், மருத்துவ சிகிச்சைக்காக சினிமா உலகில் இருந்து சிறிது காலம் விலகுவதாக அறிவித்தார். மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த அவருக்கு உடல்நலம் தேறியதாக சமீபத்தில் தகவல்கள் வந்தன.

இந்தநிலையில் தனது குழந்தைகளான ஷாக்ரான், இக்ராவின் 10-வது பிறந்தநாளை முன்னிட்டு சஞ்சய் தத் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தான் புற்றுநோய்க்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

சிறந்த பரிசு

கடந்த சில வாரங்கள் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மிகக் கடினமான நாட்களாக அமைந்தது. ஆனால் கடவுள் வலிமையான வீரர்களுக்கு தான், கடினமான போர்களை வழங்குவார்.

என் குழந்தைகளின் பிறந்த நாளான இன்று புற்றுநோய்க்கு எதிரான போரில் நான் வெற்றிப்பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இனிய நாளில் எனது குழந்தைகளுக்கு குடும்பத்தின் நலன் மற்றும் ஆரோக்கியம் என்கிற சிறந்த பரிசை கொடுக்க முடிந்துள்ளது.

இந்த கடினமான கால கட்டத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த குடும்பம், நண்பர்கள் மற்றும் அத்தனை ரசிகர்களுக்கும் நான் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

மேலும் கோகிலாபென் மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர் குழு, செவிலியர்கள், ஊழியர்கள் என்னை மிகவும் கனிவுடன் பார்த்துக்கொண்டனர். அவர்களுக்கும் எனது நன்றி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சஞ்சய் தத் தற்போது ‘கே.ஜி.எப் 2’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பை தொடர உள்ளார். மேலும் ‘சம்சேரா‘ படத்திலும் நடித்துள்ளார்.

Next Story