தேசியவாத காங்கிரசில் சேரும் ஏக்நாத் கட்சே: அஸ்திவார கற்கள் வெளியேறுவது குறித்து பா.ஜனதா சிந்திக்க வேண்டும்


தேசியவாத காங்கிரசில் சேரும் ஏக்நாத் கட்சே: அஸ்திவார கற்கள் வெளியேறுவது குறித்து பா.ஜனதா சிந்திக்க வேண்டும்
x
தினத்தந்தி 21 Oct 2020 9:49 PM GMT (Updated: 21 Oct 2020 9:49 PM GMT)

அஸ்திவார கற்கள் வெளியேறுவது குறித்து பா.ஜனதா சிந்திக்க வேண்டும் என்று ஏக்நாத் கட்சே அக்கட்சியில் இருந்து விலகியது பற்றி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்தார்.

மும்பை,

பா.ஜனதா மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே நேற்று அக்கட்சியில் இருந்து விலகினார். அவர் இன்று தேசியவாத காங்கிரசில் சேர உள்ளார். இது குறித்து உஸ்மனாபாத் மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்பை ஆய்வு செய்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-

ஏக்நாத் கட்சே எங்களது கூட்டணி கட்சியில் சேருவது நிச்சயம் வரவேற்கத்தக்கது. அவர் மறைந்த பா.ஜனதா தலைவர்கள் பிரமோத் மகாஜன், கோபிநாத் முண்டே ஆகியோருடன் இணைந்து மராட்டியத்தில் அக்கட்சியின் அடித்தளத்தை விரிவுப்படுத்திய தலைவர். ஆனால் இன்று அவர் பா.ஜனதாவில் இருந்து வெளியேறுகிறார்.

சிந்திக்க வேண்டும்

அஸ்திவாரக்கற்கள் ஏன் கட்சியை விட்டு வெளியேறுகின்றன என்பது குறித்து தற்போது பா.ஜனதா சிந்திக்க வேண்டும். ஏக்நாத் கட்சே ஒரு போராளி. அவருக்கென தனி அடையாளம் உள்ளது. அவர் ஒரு நேர்மையான தலைவர். ஏக்நாத் கட்சே போன்ற தலைவர்கள் வெளியேறுவது குறித்து நிச்சயம் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று பா.ஜனதாவின் பழைய நண்பனாக கூற கடமைப்பட்டுள்ளேன்.

இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.

Next Story