தேவேந்திர பட்னாவிசுடன் மோதல் எதிரொலி மராட்டிய பா.ஜனதா மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே கட்சியில் இருந்து விலகல்


தேவேந்திர பட்னாவிசுடன் மோதல் எதிரொலி மராட்டிய பா.ஜனதா மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே கட்சியில் இருந்து விலகல்
x
தினத்தந்தி 22 Oct 2020 3:22 AM IST (Updated: 22 Oct 2020 3:22 AM IST)
t-max-icont-min-icon

தேவேந்திர பட்னாவிசுடன் மோதல் எதிரொலியாக பா.ஜனதா மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே அக்கட்சியில் இருந்து விலகினார். அவர் இன்று தேசியவாத காங்கிரசில் சேருகிறார்.

மும்பை,

பா.ஜனதா மூத்த தலைவரான ஏக்நாத் கட்சே கடந்த ஆட்சியின் போது தேவேந்திர பட்னாவிஸ் மந்திரி சபையில் அவருக்கு அடுத்த இடத்தில் அங்கம் வகித்தவர். அதற்கு முன்னதாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றியவர்.

முறைகேடு புகார்

இந்தநிலையில் மந்திரி பதவி வகித்தபோது அவர் மீது முறைகேடு புகார்கள் எழுந்தது. நிழல்உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து 2016-ம் ஆண்டு அவர் மந்திரி பதவியில் இருந்து விலகினார். அது முதல் அவர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். மீண்டும் மந்திரி பதவிக்காக காத்திருந்தும் கிடைக்கவில்லை. கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

பட்னாவிசுடன் மோதல்

இதற்கெல்லாம் காரணம் தேவேந்திர பட்னாவிஸ் தான் என்று கருதிய 68 வயது ஏக்நாத் கட்சே, அவரை சாடி வந்தார். தேவேந்திர பட்னாவிஸ் செய்த சதி குறித்து புத்தகம் எழுதப்போவதாகவும் தெரிவித்தார். இந்த பரபரப்பான நிலையில் அவர் பா.ஜனதாவில் இருந்து விலகி தேசியவாத காங்கிரசில் சேரப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்தநிலையில் திடீர் திருப்பமாக நேற்று ஏக்நாத் கட்சே பா.ஜனதா கட்சிக்கு விடை கொடுத்தார். அவர் தனது அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதை பா.ஜனதா செய்தி தொடர்பாளர் கேசவ் உபாத்யே உறுதிப்படுத்தினார்.

இன்று சேருகிறார்

மேலும் ஏக்நாத் கட்சே இன்று(வெள்ளிக்கிழமை) தேசியவாத காங்கிரசில் சேர உள்ளார். இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவரும், மந்திரியுமான ஜெயந்த் பாட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

மராட்டியத்தில் பா.ஜனதாவை வளர்க்க மறைந்த தலைவர் கோபிநாத் முண்டேவுடன் இணைந்து பணியாற்றியவர் ஏக்நாத் கட்சே. ஆனால் அவருக்கு அந்த கட்சி உரிய மரியாதை கொடுக்கவில்லை. இந்தநிலையில் அவர் பா.ஜனதாவில் இருந்து விலகி எங்கள் கட்சியில் இணைய உள்ளார். நாளை (இன்று) மதியம் 2 மணிக்கு மும்பையில் நடைபெறும் விழாவில் அவர் எங்கள் கட்சியில் இணைகிறார். சரத்பவார் தலைமையை ஏற்று அவர் கட்சி பணியாற்ற உள்ளார். அவரது வருகை தேசியவாத காங்கிரசை பலப்படுத்தும்.

என்ன பொறுப்பு?

தேசியவாத காங்கிரசில் அவருக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பலர் எங்களது கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து உள்ளனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக உடனடியாக இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்பதால், அவர்களை கட்சியில் சேர்ப்பதை தவிர்த்து வருகிறோம். சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ், தேசியவாத காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தவர்கள் தற்போது தவறை உணர்ந்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் பரபரப்பு

பா.ஜனதாவில் இருந்து தேசியவாத காங்கிரசில் சேர உள்ள ஏக்நாத் கட்சே தொடக்க காலத்தில் மராட்டியத்தில் பா.ஜனதாவை வளர்க்க பாடுபட்டவர். வட மராட்டியத்தில் வலுவான தலைவராகவும் விளங்குகிறார். அவர் கட்சியில் இருந்து விலகியது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏக்நாத் கட்சேயின் மருமகள் ரக்‌ஷா கட்சே ராவேர் நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா எம்.பி.யாக உள்ளார். அவரும் தேசியவாத காங்கிரசில் சேருவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அவர் தங்களது கட்சியில் நீடிப்பார் என்றும், அதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் பா.ஜனதா செய்தி தொடர்பாளர் கேசவ் உபாத்யே கூறினார்.

Next Story