வேளாங்கண்ணி அருகே, மோட்டார்சைக்கிள் மோதி இளம் பெண் சாவு - தாய் படுகாயம்
வேளாங்கண்ணி அருகே மோட்டார்சைக்கிள் மோதி இளம்பெண் பரிதாபமாக இறந்தார். தாய் படுகாயமடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி,
வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரம் கைகாட்டி கிழக்கு கடற்கரை சாலை பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி வளர்மதி(வயது55). இவர்களது மகள் தமிழ்ச்செல்வி (19). சம்பவத்தன்று வளர்மதியும், தமிழ்ச்செல்வியும் அருகில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கி கொண்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் திடீரென தாய், மகள் ஆகியோர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழ்ச்செல்வி பரிதாபமாக இறந்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக வளர்மதியை திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் செருதூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பழனியாண்டி மகன் பழனிசாமி என்பது தெரியவந்தது. இந்த விபத்தில் பழனிசாமியும் காயமடைந்து நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Related Tags :
Next Story