கால்நடை மருத்துவ கல்லூரி சேர்க்கை: மாணவ-மாணவிகள் தரவரிசை பட்டியல் விரைவில் வெளியீடு அமைச்சர் பேட்டி


கால்நடை மருத்துவ கல்லூரி சேர்க்கை: மாணவ-மாணவிகள் தரவரிசை பட்டியல் விரைவில் வெளியீடு அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 22 Oct 2020 12:08 AM GMT (Updated: 22 Oct 2020 12:08 AM GMT)

கால்நடை மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான மாணவ-மாணவிகள் தரவரிசை பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை தூத்துக்குடிக்கு வந்தார். அவர் மத்திய கூட்டுறவு வங்கியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கால்நடை பராமரிப்புத்துறையில் தமிழகம் முழுவதும் 1,154 கால்நடை மருத்துவர்கள் பணி நியமனம் செய்வதற்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. வருகிற 26-ந் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. பணி நியமனத்தில் தெளிவான வெளிப்படை தன்மையை முதல்-அமைச்சர் உருவாக்கி உள்ளார்.

தரவரிசை பட்டியல்

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில், கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 250 கால்நடை கிளை நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு சேலம் தலைவாசல், தேனி மாவட்டம் வீரபாண்டி, திருப்பூர் மாவட்டம் பண்ணைக்கிணறு ஆகிய இடங்களில் 3 கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு உள்ளன. இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு கொடுத்து சாதனை படைத்து உள்ளார்.

இந்த மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் மாணவ-மாணவிகள் சேர்க்கப்படுவார்கள். இந்த ஆண்டு மட்டும் கால்நடை மருத்துவ படிப்பில் சேருவதற்காக 15 ஆயிரத்து 577 விண்ணப்பங்கள் வந்து உள்ளன. இதற்கான மாணவ-மாணவிகள் தரவரிசை பட்டியல்கள் தயார் நிலையில் உள்ளன. விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை கிளை நிலையங்கள் மற்றும் வெள்ளாடு, கறவைப்பசு வழங்கும் திட்டம் முழுமையாக முடிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு தலா 4 வெள்ளாடுகள் வீதம் 6 லட்சம் வெள்ளாடுகளும், 2 லட்சத்து 40 ஆயிரம் பெண்களுக்கு நாட்டுக்கோழியும், 15 ஆயிரம் பெண்களுக்கு கறவைப்பசுக்களும் வழங்கப்படும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story