சப்-இன்ஸ்பெக்டருடன் மது அருந்திய பிளக்ஸ் உரிமையாளர், ஆற்றில் பிணமாக மிதந்தார் - போலீஸ் விசாரணை


சப்-இன்ஸ்பெக்டருடன் மது அருந்திய பிளக்ஸ் உரிமையாளர், ஆற்றில் பிணமாக மிதந்தார் - போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 22 Oct 2020 4:00 AM IST (Updated: 22 Oct 2020 7:49 AM IST)
t-max-icont-min-icon

ஊரணிபுரத்தில் சப்-இன்ஸ்பெக்டருடன் குழுவாக அமர்ந்து மது அருந்திய பிளாக்ஸ் உரிமையாளர், ஆற்றில் பிணமாக மிதந்தார். அவரது சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள அம்மங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மகன் செல்வம்(வயது38). பிளக்ஸ் கடை உரிமையாளர். இவரும், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட சிலர் நேற்று முன்தினம் மாலை ஊரணிபுரம்- உஞ்சியவிடுதி சாலையில் உள்ள கல்லணைக்கால்வாய் சைபன் ஆற்றுப்பாலத்தில் குழுவாக அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

மது அருந்திய பிறகு அனைவரும் அங்கிருந்து புறப்பட தயாரானபோது செல்வம் நிலைதடுமாறி ஆற்றுக்குள் விழுந்ததாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு சென்று ஆற்றுநீரில் அடித்து செல்லப்பட்ட செல்வத்தை தேடினர். இந்த நிலையில் நேற்று அதிகாலை ஈச்சன்விடுதி பாலம் அருகே செல்வம் பிணமாக மீட்கப்பட்டார்.

இது குறித்து செல்வத்தின் உறவினர் முருகானந்தம் அளித்த புகாரின்பேரில் திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செல்வம் மதுபோதையில் ஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது இவரது சாவில் வேறு மர்மம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த செல்வத்துக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

Next Story