அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் ஊராட்சி தலைவர் உண்ணாவிரதம் - திருச்சி அருகே பரபரப்பு


அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் ஊராட்சி தலைவர் உண்ணாவிரதம் - திருச்சி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 22 Oct 2020 3:45 AM IST (Updated: 22 Oct 2020 8:01 AM IST)
t-max-icont-min-icon

தன் மீது அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் ஊராட்சி தலைவர் உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜீயபுரம்,

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பெருகமணி ஊராட்சியில் ஊராட்சி தலைவராக இருப்பவர் கிருத்திகா. தி.மு.க.வை சேர்ந்த இவர், ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர். இந்தநிலையில் பெருகமணி ஊராட்சி தலைவர் ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபடுவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த திங்கட்கிழமையன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாளில் பெருகமணி ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார் மனு கொடுத்துள்ளார்.

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதுபற்றி அறிந்த ஊராட்சி தலைவர் கிருத்திகா, தன் மீது அவதூறு பரப்பியவர்கள் மீதும், ஊழல் செய்வதாக கூறும் வார்டு உறுப்பினர் மற்றும் சிலரும் அதற்கான ஆதாரங்களை கொடுக்க வேண்டும் என்று கூறி நேற்று காலை பெருகமணி ஊராட்சி அலுவலகம் முன் உள்ள காந்தி சிலையின் அருகில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு உறுதுணையாக அந்த பகுதியை சேர்ந்த சிலர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் நிர்மலா சம்பவ இடத்திற்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஊராட்சி துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து ஊராட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.

இதுபற்றி பெருகமணி ஊராட்சி தலைவர் கிருத்திகா கூறியதாவது:-

இந்த ஊராட்சியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 10 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் நான் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவராக இருப்பதால் என்னிடம் யாரும் வருவதில்லை. வார்டு உறுப்பினர்கள் கூட தனி அறையில் நாற்காலி போட்டு அமர்ந்து கொள்கின்றனர். இதனால் ஊராட்சி நிர்வாகம் சம்பந்தமாக எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாமல் மிகுந்த சிரமப்படுகிறேன்.

தற்பொழுது ஊராட்சியில் குடிநீர் பராமரிப்பு, தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் சாக்கடை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். மேற்கொண்ட பணிகள் செய்யப்பட்டு அதற்கு கூறிய ஆதாரங்கள் கணக்குகள் முறையாக எழுதப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் எப்படி என் மீது ஊழல் குற்றச்சாட்டு கூற முடியும்.

மேலும் நான் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் ஊராட்சியில் எந்த ஒரு பணியும் செய்ய முடிவதில்லை. மேலும் ஊராட்சி துணை தலைவராக இருப்பவர் தனக்கென்று தனி அறை வேண்டும் என்று கேட்கிறார். மேலும் எனக்கு போனில் மிரட்டல்கள் வருகின்றன. ஊராட்சி நிர்வாகம் வெளிப்படையாகவே நடைபெறுகிறது.

தற்போது புகார் எழுந்துள்ளதால் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆய்வு செய்து என்மீது தவறு என்று நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கலாம். தவறும் பட்சத்தில் என்மீது அவதூறாக ஊழல் குற்றசாட்டை சுமத்திய ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் சிலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக ஊராட்சி ஒன்றிய ஆணையர் நிர்மலாவிடம் கேட்டபோது, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி தலைவர் எழுத்துப்பூர்வமாக கொடுக்கும் புகார் மீது விசாரணை செய்து, மாவட்ட கலெக்டரிடம் கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த சம்பவத்தால் பெருகமணி ஊராட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story