மாவட்ட செய்திகள்

மன்னார் வளைகுடா கடல் பாதுகாப்புக்கு புதிதாக அதிவேக ரோந்து கப்பல் விரைவில் வருகிறது + "||" + A new high speed patrol vessel is coming soon for the protection of the Gulf of Mannar

மன்னார் வளைகுடா கடல் பாதுகாப்புக்கு புதிதாக அதிவேக ரோந்து கப்பல் விரைவில் வருகிறது

மன்னார் வளைகுடா கடல் பாதுகாப்புக்கு புதிதாக அதிவேக ரோந்து கப்பல் விரைவில் வருகிறது
மன்னார் வளைகுடா கடல் பகுதி பாதுகாப்புக்காக கடற்படையின் அதிவேக ரோந்து கப்பல் விரைவில் வர உள்ளது.
ராமேசுவரம், 

ராமநாதபுரம் மாவட்டத்தில் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடல் அட்டை, மஞ்சள், போதைப்பொருள் கடத்தல் அதிகமாகி வருகிறது. அதனால் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 2 மாதத்துக்கு முன்பு மன்னார் வளைகுடா கடல் பகுதியை தமிழகம்-புதுச்சேரிக்கான பிராந்திய கடற்படை அதிகாரி புனித்சதா நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர், விரைவில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடற்படையின் அதிவேக ரோந்து கப்பல் ஒன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இந்தநிலையில் ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துகால் பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் மற்றும் அதை சார்ந்த கடல் பகுதியை நேற்று ராமேசுவரம் கடற்படை கமாண்டர் ஏ.கே.தாஸ் தலைமையிலான கடற்படை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து ஒரு நாட்டுப்படகில் கடற்படையினர் குருசடை தீவு வரையிலும் சென்று கடலில் உள்ள ஆழத்தை பதிவு செய்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அந்த பகுதியில் கடற்படையினர் ஆய்வு நடத்தினர்.

இதுபற்றி கடற்படை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக இந்திய கடற்படையின் அதிவேக ரோந்து கப்பல் ஒன்று அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. மன்னார் வளைகுடா கடல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் கப்பல், குந்துகால் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகத்தின் ஒரு பகுதியிலேயே நிறுத்தி வைக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

விரைவில் அந்த ரோந்து கப்பல் பாம்பன் குந்துகால் கடல் பகுதிக்கு கொண்டுவரப்படும். அதற்காக முன்கூட்டியே பாம்பன் குந்துகால் துறைமுக பகுதியில் இருந்து, குருசடை தீவு வரையிலான கடல் பகுதியில் உள்ள கடலின் ஆழம், நீரோட்ட வேகம் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகிறோம். மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக நடைபெறும் கடத்தலை முற்றிலும் தடுக்கும் வகையில் இரவு-பகலாக இந்த அதிவேக கப்பல் ரோந்து பணியில் ஈடுபடும்.

இவ்வாறு அவர் கூறினார்.