திருநங்கைகள் சங்க தலைவி கழுத்தை அறுத்து படுகொலை - உடலை டிரம்மில் அடைத்த கொடூரம்
திருநங்கைகள் சங்க தலைவி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை டிரம்மில் அடைத்து விட்டு தப்பிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை,
கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர்.ரோடு பகுதியை சேர்ந்தவர் சங்கீதா (வயது 65). திருநங்கை. இவர் கோவை மாவட்ட திருநங்கைகள் சங்க தலைவியாக இருந்து வந்தார். இவர், கோவை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு தேவையான உதவிகளை சங்கீதா செய்து வந்தார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனைத்து திருநங்கைகளையும் ஒருங்கிணைத்து வடகோவையில் ‘டிரான்ஸ் கிச்சன்‘ என்ற பெயரில் பிரியாணி ஓட்டலை தொடங்கி நடத்தி வந்தார்.
அவர், கடந்த 18-ந் தேதி தன்னுடன் வேலை பார்க்கும் திருநங்கை ஒருவருடன் கடைசியாக செல்போனில் பேசியுள்ளார். அதன்பிறகு அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் அவர் எங்காவது சென்ற இருக்கலாம் என்று மற்ற திருநங்கைகள் கருதினார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை சங்கீதாவின் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் உதவி கமிஷனர் பிரேமானந்தன், சாய்பாபா காலனி இன்ஸ்பெக்டர் சந்திரலேகா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள், வீட்டுக்குள் எங்கிருந்து துர்நாற்றம் வருகிறது? என்பதை அறிய சோதனை நடத்தினர். அப்போது வீட்டுக்குள் இருந்த டிரம்முக்குள் இருந்து துர்நாற்றம் வந்தது தெரியவந்தது. உடனே அந்த டிரம்மை போலீசார் திறந்து பார்த்தனர். அதற்குள் சங்கீதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலிலும் பல இடங்களில் காயங்கள் இருந்தன. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த படுகொலை கடந்த 18-ந் தேதி இரவு நடைபெற்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
கொலையுண்ட சங்கீதா, வசதியான வீட்டில் பிறந்துள்ளார். அவர், திருநங்கையாக மாறியதால் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவருக்கு ஏராளமான சொத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அந்த சொத்துகளை அடையும் நோக்கத்தில் யாராவது கூலிப் படையை ஏவி கொலை செய்தார்களா? அல்லது அவர் தனியாக இருப்பதை பார்த்து பணம், நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்கிடையே அவர் நடத்தி வந்த ஓட்டலில் வேலை பார்த்த 2 ஊழியர்கள் மாயமாகி உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை தொடர்பாக திருநங்கை, ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநங்கைகள் சங்க தலைவி படுகொலை செய்யப்பட்டது குறித்த தகவல் அறிந்ததும் கோவை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான திருநங்கைகள் அங்கு குவிந்தனர். அவர்கள் அனைவரும் சோகத்துடன் காணப்பட்டனர்.
Related Tags :
Next Story