மருதுபாண்டியர் நினைவு தினம்: அஞ்சலி செலுத்த வருபவர்கள் அனுமதி பெற்று வரவேண்டும் - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்


மருதுபாண்டியர் நினைவு தினம்: அஞ்சலி செலுத்த வருபவர்கள் அனுமதி பெற்று வரவேண்டும் - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்
x
தினத்தந்தி 22 Oct 2020 10:45 AM IST (Updated: 22 Oct 2020 10:31 AM IST)
t-max-icont-min-icon

மாமன்னர் மருதுபாண்டியர் நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் போலீசாரிடம் அனுமதி பெற்று வரவேண்டும் என்று சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு அறிவுரையின்படி 144 பிரிவின் கீழ் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

எனவே வருகிற 24-ந் தேதி திருப்பத்தூரிலும், 27-ந் தேதி காளையார் கோவிலிலும் நடைபெறும் மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவு தின விழாவின்போது அஞ்சலி செலுத்த வருபவர்கள், பொதுமக்களின் நலன் கருதி அரசு அறிவித்துள்ள அனைத்து வழிகாட்டுதல்களையும் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

மரியாதை செலுத்த வருகைதரும் அரசியல் கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் 5 பேருக்கு மிகாமல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அல்லது போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் வாகனத்திற்கான முன் அனுமதியை பெற்று அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து மரியாதை செலுத்த வேண்டும்.

மேலும் அஞ்சலி செலுத்த வருபவர்கள் வருகிற 23-ந் தேதிக்குள் போலீசாரிடம் அனுமதி பெறவேண்டும். மரியாதை செலுத்த வருபவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு வந்துசெல்ல வேண்டும். அத்துடன் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து மரியாதை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story