நகரும் ரேஷன் கடை திட்டம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு


நகரும் ரேஷன் கடை திட்டம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு
x
தினத்தந்தி 22 Oct 2020 5:15 AM GMT (Updated: 22 Oct 2020 5:18 AM GMT)

நகரும் ரேஷன் கடை திட்டம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது என்று அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.

காரைக்குடி,

காரைக்குடியை அடுத்த சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியங்குடியிருப்பு, வளச்சேரிப்பட்டி, நாட்டுச்சேரி ஆகிய பகுதிகளில் கூட்டுறவுத்துறை சார்பில் அம்மா நகரும் ரேஷன் கடை தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கிராமத்தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் தலைமை தாங்கி நகரும் ரேஷன் கடையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

கிராம பகுதிகளில் ரேஷன் கடைகள் மற்றும் பகுதி நேர ரேஷன் கடை இல்லாத இடங்களில் நகரும் ரேஷன்கடை திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியங்குடியிருப்பு, வளச்சேரிப்பட்டி, நாட்டுச்சேரி, மொழும்பூர் ஆகிய கிராம பகுதிகளில் நகரும் ரேஷன் கடை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரேஷன் கடை இல்லாத பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க நீண்டதூரம் சென்று வாங்கும் நிலை இருக்காது. மேலும் ரேஷன் பொருட்கள் தேவையான நேரத்தில் பொதுமக்கள் இருக்கும் இடத்திலேயே சென்று வினியோகம் செய்யப்படும்.

வாரம் 3 முறை சுழற்சி அடிப்படையில் கிராம மக்களுக்கு நகரும் ரேஷன் கடை மூலம் பொருட்கள் வழங்கப்படும். மேலும் பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலையால் பொருட்கள் வாங்க முடியாத குடும்ப அட்டைதாரர்கள் வழக்கம்போல் ஏற்கனவே பொருட்கள் வாங்கி வரும் ரேஷன் கடைக்கு சென்றும் பொருட்களை வாங்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தொடர்ந்து நாட்டுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட மொழும்பூர் கிராமத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி துறை மூலம் கட்டப்பட்ட கிராம சேவை மைய கட்டிடத்தை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார். இதில் முன்னாள் எம்.பி. செந்தில்நாதன், சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யாசெந்தில்நாதன், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திருப்பதிராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. சோழன் பழனிசாமி, சாக்கோட்டை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story